மசோதாக்கள் ஒப்புதலுக்கு காலக்கெடு வேண்டும்

இந்திய அரசியல் சட்டப்படி, ஒவ்வொரு மாநிலத்துக்கும் மத்திய அரசாங்கத்தால் நியமிக்கப்படும் கவர்னர் ஒருவர் இருப்பார்.

Update: 2023-11-13 19:40 GMT

இந்திய அரசியல் சட்டப்படி, ஒவ்வொரு மாநிலத்துக்கும் மத்திய அரசாங்கத்தால் நியமிக்கப்படும் கவர்னர் ஒருவர் இருப்பார். மாநிலத்தின் அன்றாட நிர்வாகம் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கையில் இருந்தாலும், சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள், அரசின் முக்கிய உத்தரவுகள் கவர்னரின் ஒப்புதலை பெறவேண்டும். அரசியல் சட்டத்தில் கவர்னருக்கு அனுப்பப்படும் மசோதாக்கள் மீது அவர் எத்தனை நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக என்றுதான் கூறப்பட்டுள்ளது.

சமீப ஆண்டுகளாக, பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில், கவர்னர்களுக்கும் மாநில முதல்-மந்திரிகளுக்கும் சுமுக உறவு இல்லாததால், நிர்வாகத்தில் பல இடையூறுகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, தமிழ்நாடு, பஞ்சாப், கேரளா மாநிலங்களில் அரசு அனுப்பிய மசோதாக்களுக்கு கவர்னர்கள் ஒப்புதல் அளிக்கவில்லை என்றுகூறி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்திலும் இவ்வாறு கவர்னர் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போட்டவுடன், கவர்னர் ஒப்புதல் அளித்துவிட்டதால், அந்த வழக்கு தொடர்ந்து நடக்கவில்லை.

இப்போது ஆம் ஆத்மி ஆட்சி செய்யும் பஞ்சாப்பில், முன்பு தமிழக கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித் கவர்னராக இருந்து வருகிறார். அம்மாநில அரசு, "சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய 5 மசோதாக்களை கவர்னர் கிடப்பில் போட்டுள்ளதால் நிர்வாகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது" என்றுகூறி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் கொண்ட பெஞ்சு, ஒரு வரலாற்று சிறப்புமிக்க உத்தரவை வழங்கியுள்ளனர். "சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குமாறு கவர்னருக்கு உத்தரவிடக்கோரி, சுப்ரீம் கோர்ட்டை அணுக வேண்டிய கட்டாயத்துக்கு மாநில அரசாங்கங்கள் தள்ளப்பட்டு இருப்பது கவலையளிக்கிறது. மசோதாக்களை ஆய்வு செய்ய கவர்னர்களுக்கு அனைத்து அதிகாரமும் இருக்கிறது. ஆனால், இப்படி சுப்ரீம் கோர்ட்டுக்கு வருவதற்கு முன்பாகவே ஒப்புதல் வழங்கவேண்டும். கவர்னர்கள் தாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அல்ல என்பதை மறந்துவிடக்கூடாது. கவர்னர்களும், மாநில அரசுகளும் மோதல் போக்கை கடைபிடிப்பது கவலையளிக்கிறது. இதுபோன்ற பிரச்சினைகளை கவர்னர்களும், முதல்-மந்திரிகளும் பேசி தீர்த்துக்கொள்ளவேண்டும். இருவரும் ஆத்ம பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்" என்று கூறியுள்ளது.

மேலும், பஞ்சாப் அரசாங்கத்தை போல தமிழ்நாடு, கேரளா அரசாங்கங்கள் சார்பிலும், கவர்னர்கள் கிடப்பில் வைத்திருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கோரிய வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து கடந்த 10-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தமிழக மற்றும் பஞ்சாப் கவர்னர்களுக்கு கடும் கண்டனங்கள் கூறப்பட்டுள்ளன. இந்த பிரச்சினைக்கு சுப்ரீம் கோர்ட்டுதான் ஒரு முடிவை தெளிவான தீர்ப்பு மூலம் கூறவேண்டும். எல்லா விஷயங்களிலும் ஒரு தெளிவான வழிகளைக்காட்டும் இந்திய அரசியல் சட்டத்தில், கவர்னருக்கு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு எவ்வளவு நாட்களுக்குள் பதில் அனுப்பப்பட வேண்டுமென்ற காலக்கெடு மட்டும் இல்லை. எவ்வளவோ திருத்தங்களை அரசியல் சட்டம் பார்த்துவிட்டது. மசோதாக்களில் கவர்னர்கள் கையெழுத்திட எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக என்றால், எவ்வளவு காலத்துக்குள் என்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு ஒரு தீர்ப்பு கூறி, அதற்காக அரசியல் சட்டத்தை திருத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த காலக்கெடு குறித்தும் சுப்ரீம் கோர்ட்டு வழங்கும் தீர்ப்பு மூலம் எதிர்காலத்தில் கவர்னர்களுக்கும், மாநில அரசாங்கங்களுக்கும் மோதல் இல்லாமல் நல்லுறவு ஏற்பட வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்