ஆசிய பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியா சாம்பியன்: பிரதமர் மோடி வாழ்த்து

ஆசிய பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியா தங்கம் வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

Update: 2023-04-30 19:12 GMT

டெல்லி,

40-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, ஆசிய பேட்மிண்டன் சாம்பியன் ஷிப் தொடரில் நேற்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில், இந்திய அணியின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை மலேசிய ஜோடியான ஓங் யூ சின் மற்றும் தியோ ஈ யி இணையை எதிர்கொண்டது.

பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 16-21, 21-17, 21-19 என்ற செட் கணக்கில் மலேசிய ஜோடியான ஓங் யூ சின் மற்றும் தியோ ஈ யி ஜோடியை வீழ்த்தி இந்திய அணியின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி தங்கப்பதக்கம் வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

58 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி ஆசிய கோப்பை பேட்மிண்டன் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பாக 1965ம் ஆண்டு ஆசிய கோப்பை பேட்மிண்டன் போட்டியில் இந்தியா தங்கம் வென்றுள்ளது. அதேவேளை, ஆண்கள் இரட்டையர் பிரிவில் ஆசிய கோப்பை பேட்மிண்டன் போட்டியில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

இந்நிலையில், ஆசிய கோப்பை பேட்மிண்டன் போட்டியில் இந்தியா தங்கம் வென்றதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ஆசிய கோப்பை பேட்மிண்டன் தொடரில் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ள சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டியால் பெருமைபடுகிறோம். இவருக்கும் எனது வாழ்த்துக்கள். இருவரும் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்' என பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்