கையில் எலும்பு முறிவுடன் விளையாடி வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா
டைமண்ட் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் நீரஜ் சோப்ரா 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.;
புதுடெல்லி,
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் நடந்த டைமண்ட் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் ஈட்டி எறிதலில் பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா களம் இறங்கினார் . மொத்தம் 6 சுற்றுகளின் முடிவில் நீரஜ் சோப்ரா 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். அதிகபட்சமாக 3வது சுற்றில் 87.86 மீட்டர் எறிந்தார்.அதாவது ஒரு சென்டிமீட்டரில் சோப்ரா தங்கப்பதக்கத்தை இழந்தார். 87.87 மீட்டர் எறிந்த கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் முதல் இடம் பிடித்து தங்கம் வென்றார்.
இந்த நிலையில்,கையில் எலும்பு முறிவுடன் இந்த தொடரில் விளையாடி நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.இது தொடர்பான நீரஜ் சோப்ரா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,
டைமண்ட் லீக் தொடருக்காக பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இடது கை விரல் எலும்பு முறிந்துவிட்டது. எப்படியாவது தொடரில் விளையாடிவிட வேண்டும் என்ற மன உறுதியுடன் இருந்தேன். வலி மிகுந்த சவாலாக இருந்தது. அணியினரின் உதவியுடன் தொடரில் பங்கேற்க முடிந்தது.
இது இந்த ஆண்டின் கடைசி போட்டியாகும். எனது சொந்த எதிர்பார்ப்புகளை என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்றாலும், இதில் இருந்து நிறைய கற்றுக்கொண்டதாக உணர்கிறேன். அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். 2024 என்னை ஒரு சிறந்த விளையாட்டு வீரராகவும், நபராகவும் ஆக்கியுள்ளது. 2025-ல் சந்திப்போம் . என தெரிவித்துள்ளார் .