ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய குத்துச்சண்டை அணியில் தீபக், நிஷாந்த்

ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய குத்துச்சண்டை அணியில் தீபக், நிஷாந்த் இடம் பிடித்து உள்ளனர்.

Update: 2023-07-01 21:28 GMT

புதுடெல்லி,

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் வருகிற செப்டம்பர் 23-ந்தேதி முதல் அக்டோபர் 8-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய குத்துச்சண்டை அணி, இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் புதிய தேர்வு முறையின்படி வீரர், வீராங்கனைகளின் திறன் மதிப்பீட்டுக்கு பிறகு நேற்று அறிவிக்கப்பட்டது.

கடந்த மே மாதம் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற வீரர்களான தீபக் போரியா, நிஷாந்த் தேவ் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர். ஆசிய விளையாட்டு சாம்பியனும், 2019-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்றவருமான அமித் பன்ஹால், திறன் மதிப்பீட்டில் தீபக் போரியாவை விட பின்தங்கியதால் அணியில் இடத்தை இழந்துள்ளார்.

2 முறை உலக சாம்பியனான நிகாத் ஜரீன், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற லல்வினா ஆகியோர் கடந்த மார்ச் மாதம் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் அடிப்படையில் நேரடியாக பெண்கள் அணிக்கு தேர்வாகி இருக்கின்றனர்.

உலக சாம்பியன் நிது கங்காஸ், பிரீத்தி பவாரிடம் தனது இடத்தை பறிகொடுத்து இருக்கிறார். இந்த ஆசிய விளையாட்டு போட்டி, அடுத்த ஆண்டு பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு முதலாவது தகுதி சுற்றாகும்.

ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய குத்துச்சண்டை அணி வருமாறு:-

பெண்கள் அணி: நிகாத் ஜரீன் (51 கிலோ), பிரீத்தி பவார் (54 கிலோ), பர்வீன் ஹூடா (57 கிலோ), ஜெஸ்மின் லம்போரியா (60 கிலோ), அருந்ததி சவுத்ரி (66 கிலோ), லவ்லினா போர்கோஹைன் (75 கிலோ).

ஆண்கள் அணி: தீபக் போரியா (51 கிலோ), சச்சின் சிவாச் (57 கிலோ), ஷிவ தபா (63.5 கிலோ), நிஷாந்த் தேவ் (71 கிலோ), லக்ஷயா சாஹர் (80 கிலோ), சஞ்சீத் (92 கிலோ), நரேந்தர் பெர்வால் (92 கிலோவுக்கு மேல்).

Tags:    

மேலும் செய்திகள்