மகத்தான மாற்றுத்திறனாளி வீரர்!

‘வாழ்வில் எதிர்கொள்ளும் சோதனைகளையும் பிரச்சினைகளையும் வாய்ப்புகளாக மாற்றுபவர்களே வெற்றியாளர் களாகிறார்கள்’ என்பார்கள்.

Update: 2017-09-16 10:25 GMT
‘வாழ்வில் எதிர்கொள்ளும் சோதனைகளையும் பிரச்சினைகளையும் வாய்ப்புகளாக மாற்றுபவர்களே வெற்றியாளர் களாகிறார்கள்’ என்பார்கள்.

அதற்கு, மிகச் சரியான உதாரணம், ஆதித்ய மேத்தா.

விபத்து ஒன்றில் தனது ஒரு காலை இழந்த ஆதித்ய மேத்தா, இந்தியாவின் முதல் ‘பாரா சைக்கிளிங்’ வீரராக உருவெடுத்துவிட்டார். ஆசிய பதக்கம் உள்பட சொந்த நாட்டுக்கு நிறைய பெருமைகளை பெற்றுக்கொடுத்து, லிம்கா சாதனைப் புத்தகத்திலும் பதிவாகி விட்டார்.

ஆதித்ய மேத்தாவின் சாதனைகளையும்விட பெரிய விஷயம், தன்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் ஓர் ஆதரவு அமைப்பை உருவாக்க முயல்வது. அவர்களில், நாட்டுக்காகச் சண்டையிட்டுக் காயமடைந்த வீரர்களும் அடக்கம்.

ஆதித்ய மேத்தாவுடன் ஒரு சந்திப்பு...

ஒரு ‘பாரா சைக்கிளிங்’ வீரராக நீங்கள் ஆரம்பத்தில் எதிர்கொண்ட பிரச்சினைகள் என்னென்ன?


எனக்கு ஒரு ‘ஸ்பான்சர்’ பெறுவது முதல், எனக்கேற்ற வகையில் சைக்கிளை வடிவமைப்பது வரை எல்லாமே கஷ்டமாக இருந்தன. நாட்டில், உடல் உறுப்பு நீக்கப்பட்டவர்களில் சைக்கிளிங்கில் ஈடுபட்ட முதல் நபர் நான் என்பதால், எனக்கு வழிகாட்ட ஆளில்லை.

நீங்கள் எங்கெல்லாம் சைக்கிள் பயணம் மேற்கொண்டிருக்கிறீர்கள்?

லண்டன் முதல் பாரீஸ், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி, மணாலி முதல் கர்துங் லா, டெல்லி முதல் மும்பை, ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு என்று பல நீண்ட நெடும் சைக்கிள் பயணங்களை நான் மேற்கொண்டிருக்கிறேன்.

அவற்றில் மிகவும் சவாலாக இருந்தது எது?


சந்தேகமே இல்லாமல், மணாலி முதல் கர்துங் லா வரையிலான பயணம்தான். அப்போது, கடுங்குளிர் காரணமாக என் மூக்கிலிருந்து ரத்தம் வடியும், உடம்பெல்லாம் பாளம் பாளமாக வெடித்துப் போய்விடும். இந்தக் கஷ்டம் ஒருபுறம் என்றால், எனது குடும்பத்தினரைப் பிரிந்திருந்த கஷ்டம் மறுபுறம். அந்த வழியில் ஒன்றிரண்டு பொதுத் தொலைபேசி இடங்கள்தான் இருக்கும். அவற்றிலோ நீண்ட வரிசை காத்திருக்கும். எனவே என்னால் என் குடும்பத்துடன் அதிகம் பேச முடியாது. வரிசையில் நீண்டநேரம் காத்திருந்து போன் பேசத் தொடங்கினாலும், ஒன்றிரண்டு நிமிடங்களுக்கு மேல் பேச முடியாது. பின்னால் காத்திருப்பவர்கள் சத்தம் போட ஆரம்பித்துவிடுவார்கள்.

உங்களின் ஒவ்வொரு நாளும் எப்படிக் கழியும்?


நான் அதிகாலை 3.30 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவேன். தொழில்முறை வீரர்கள், அமெச்சூர் வீரர்கள் அனைவருடனும் இணைந்து பயிற்சி செய்வேன். அதில் கொஞ்ச நேரம் கழியும். பிற்பகலில் நான் அப்பாவுக்காகவும் உழைக்கிறேன் என்று காட்டிக்கொள்வதற்காக அவரது அலுவலகத்துக்கு சிறிது நேரம் செல்வேன். மாலையில் நண்பர்களுடன் உடற்பயிற்சிக்கூடம் சென்று, எனது உடற் பயிற்சியில் கவனம் செலுத்துவேன்.

நீங்கள் சைக்கிள் ஓட்டிச் செல்கையில் சாலையில் போகும் மற்றவர்களின் ‘ரியாக்‌ஷன்’ எப்படி இருக்கும்?

பலநேரங்களில், பலர் என்னைப் பார்ப்பதில், தாங்கள் வாகனம் ஓட்டுவதை மறந்துவிடுவதைப் பார்க்கிறேன். அப்போதெல்லாம், ‘ஹலோ பாஸ்... நேரே பார்த்து ஓட்டுங்க’ என்று கத்துவேன். சிலர், ஆசை ஆசையாய் என்னுடன் செல்பி எடுத்துக் கொள்வார்கள்.

உங்களின் வெற்றிக்கதைகளில் சில...

நிறைய இருக்கின்றன. உதாரணத்துக்கு, நடந்து முடிந்த ஆசிய பாரா சைக்கிளிங் சாம்பியன்ஷிப்பில் மூன்று பதக்கங்களையுமே எங்களின் இந்திய அணிதான் வென்றது. அந்த நேரத்தில், அடிப்படையான ‘அலாய்’ சைக்கிள்களை கூட எங்கிருந்து வாங்குவது என்று விழித்துக் கொண்டிருந்தோம். எங்கள் அணியைச் சேர்ந்தவரும், ஆசிய போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவருமான திவிஜ் ஷா, உண்மையில் ஒரு கிரிக்கெட் வீரர். பிற் பாடுதான் அவர் பாரா-சைக்கிளிங்கில் ஆர்வம் கொண்டு சாதித்தார்.

ராணுவ வீரர்களுடன் நீங்கள் இணைந்து செயல்படுவது பற்றிக் கூறுங்கள்...

நாட்டைக் காக்கும் பணியில் தங்கள் உடல் உறுப்புகளை இழந்த பாதுகாப்புப் படை வீரர் களுடன் நான் இணைந்து செயல்படுகிறேன். எங்களின் முக்கியமான நோக்கம், அவர்களை ஊக்கப்படுத்துவதும், உலகில் யாருக்கும் அவர்கள் சளைத்தவர்கள் அல்ல என்று உணரச் செய்வதும்தான். நாங்கள் கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் சுமார் 900 ராணுவ வீரர்களுக்கு ஆலோசனை வழங்கியிருப்போம். அவர்களில் தகுதியுடையவர்களைத் தேர்ந்தெடுத்து, தொழில்முறைப் பயிற்சியும் அளித்திருக்கிறோம்.

அடித்துச் சொல்லலாம், ஆதித்ய மேத்தா ஒரு மகத்தான வீரர்தான்! 

மேலும் செய்திகள்