புரோ கபடி லீக்; பெங்காலை வீழ்த்தி வெற்றி பெற்ற ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்
இன்று நடைபெற்று வரும் 2வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.;
ஐதராபாத்,
11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் கடந்த 18ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.
லீக்கில் 'டாப்-2' இடங்களை வசப்படுத்தும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். 3 முதல் 6 இடங்களை பெறும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் 2 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில் , இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தன.
இறுதியில் இந்த ஆட்டத்தில் 39-34 என்ற புள்ளிக்கணக்கில் பெங்காலை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் வெற்றி பெற்றது. தொடர்ந்து இன்று நடைபெற்று வரும் 2வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.