17 அணிகள் பங்கேற்கும் அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னையில் நாளை தொடக்கம்

17 அணிகள் பங்கேற்கும் அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னையில் நாளை தொடங்குகிறது.

Update: 2017-03-05 20:06 GMT

சென்னை,

17 அணிகள் பங்கேற்கும் அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னையில் நாளை தொடங்குகிறது.

கைப்பந்து போட்டி

நெல்லை பிரன்ட்ஸ் கிளப், டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் 44–வது பி.ஜான் நினைவு அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் 12–ந்தேதி வரை நடத்தப்படுகிறது. தினத்தந்தி, டிடி நெக்ஸ்ட், எஸ்.என்.ஜே. ஆகிய நிறுவனங்களின் ஆதரவுடன் நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் நடப்பு சாம்பியன் சென்னை ஐ.ஓ.பி., சுங்க இலாகா, இந்தியன் வங்கி, எஸ்.ஆர்.எம்., எஸ்.டி.ஏ.டி. செயின்ட் ஜோசப்ஸ், வருமானவரித்துறை, ஐ.சி.எப்., ஓ.என்.ஜி.சி. (டேராடூன்), கர்நாடகா, வருமானவரித்துறை (புனே) மேற்கு ரெயில்வே (மும்பை) ஆகிய 12 அணிகள் பங்கேற்கின்றன.

அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் விளையாடும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெறும்.

பெண்கள் பிரிவில் கேரள போலீஸ், தெற்கு ரெயில்வே, தென்மத்திய ரெயில்வே, மேற்கு ரெயில்வே (மும்பை), சாய் (தலசேரி) ஆகிய 5 அணிகள் கலந்து கொள்கின்றன. ரவுன்ட் ராபின் லீக் அடிப்படையில் பெண்கள் அணிக்குரிய ஆட்டங்கள் நடைபெறும்.

டாக்டர் சிவந்தி தங்க கோப்பை

ஆண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு டாக்டர் சிவந்தி தங்க கோப்பையும், பெண்கள் பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு என்.என்.ஜே. கோப்பையும் வழங்கப்படும். மேலும் தொடரில் சிறந்த வீரர்கள் 5 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு டாக்டர் சிவந்தி விருதுடன் தலா ரூ.5 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும்.

இதே போல் சிறப்பாக விளையாடும் 5 வீராங்கனைகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு பி.ஜான் விருதுடன், தலா ரூ.5 ஆயிரம் கொடுக்கப்படும். ஆட்டங்கள் தினமும் மாலை 5 மணிக்கு தொடங்கி நடைபெறும்.

இந்த தகவலை போட்டி ஒருங்கிணைப்பு கமிட்டி சேர்மன் டபிள்யூ.ஐ.தேவாரம் சென்னையில் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

ஹாரிஸ் ஜெயராஜ்

முன்னதாக டாக்டர் சிவந்தி தங்ககோப்பை அறிமுக விழா அங்குள்ள மைதானத்தில் நடந்தது. கோப்பையை இசைஅமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அறிமுகம் செய்து வைத்தார். அவர் பேசும் போது ‘கைப்பந்து விளையாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும். சிறு வயதில் நான் தெருவில் வலை கட்டி கைப்பந்து விளையாடி இருக்கிறேன். திறமையான வீரர், வீராங்கனைகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க நிறைய கிளப்புகள் உருவாக்கப்பட வேண்டும். இது போன்ற ஒரு அருமையான திடல் எனக்கு கிடைத்திருந்தால் ஒரு வேளை நானும் இசை அமைப்பாளராக இல்லாமல் விளையாட்டு வீரராக உருவாகியிருக்கலாம்’ என்றார். நிகழ்ச்சியில் எஸ்.என்.ஜே. குரூப் சேர்மன் ஜெயமுருகன், ரோமா குரூப் நிர்வாக இயக்குனர் ராஜன், சான் மீடியா நிர்வாக இயக்குனர் அர்ஜூன்துரை மற்றும் பயிற்சியாளர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்