துளிகள்

இளையோர் உலக கோப்பை கால்பந்து போட்டி (17 வயதுக்குட்பட்டோர்) இந்தியாவில் அக்டோபர் மாதம் நடக்கிறது.

Update: 2017-03-01 20:25 GMT
* இளையோர் உலக கோப்பை கால்பந்து போட்டி (17 வயதுக்குட்பட்டோர்) இந்தியாவில் அக்டோபர் மாதம் நடக்கிறது. இதற்கிடையில் இந்திய இளையோர் கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருந்த நிகோலாய் ஆடம் (ஜெர்மனி) கடந்த மாதம் ராஜினாமா செய்தார். வீரர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நிர்ப்பந்தத்தின் பேரில் அவர் விலகியதாக செய்தி வெளியானது. இந்த நிலையில் இந்திய இளையோர் கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த 63 வயதான லூயிஸ் நார்டன் டி மாடோஸ் நேற்று நியமிக்கப்பட்டார். பயிற்சியாளர் லூயிஸ் நார்டன் டி மாடோஸ்சின் கொள்ளு தாத்தா கோவாவில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

* சென்னை மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில் சீனியர் டிவிசன் லீக் கால்பந்து போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் சென்னை யுனைடெட் அணி 3-1 என்ற கோல் கணக்கில் இந்தியன் வங்கி அணியை வீழ்த்தியது. யுனைடெட் அணியில் அமோஸ் 33-வது நிமிடத்திலும், அனோஸ் 60-வது நிமிடத்திலும், சாந்தகுமார் 90-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இந்தியன் வங்கி அணி தரப்பில் அபிடுன் ஜோசப் 17-வது நிமிடத்தில் கோல் அடித்தார். சுங்க இலாகா-தெற்கு ரெயில்வே அணிகள் இடையிலான லீக் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. சுங்க இலாகா அணியில் ஸ்ரீராமும், தெற்கு ரெயில்வே அணியில் சரத் ராஜூம் தலா ஒரு கோல் அடித்தனர்.

* தென்மண்டல கல்லூரி அணிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் ஆந்திராவில் நடந்தது. இதில் பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் பிரிவில் சென்னையை சேர்ந்த எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி இறுதிப்போட்டியில் 2-1 என்ற கணக்கில் எஸ்.எஸ்.என்.கல்லூரியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. டேபிள் டென்னிஸ் மற்றும் கைப்பந்து போட்டியின் பெண்கள் பிரிவிலும் அந்த அணி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.

*மாநில அளவிலான பீச் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி (இருபாலருக்கும்) சென்னை நேரு ஸ்டேடியத்தில் வருகிற 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து புதுச்சேரியில் நடைபெறும் தேசிய பீச் வாலிபால் போட்டிக்கான தமிழக அணி தேர்வு செய்யப்படும்.

*இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ரோகித் சர்மா, தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக நவம்பர் மாதத்திற்கு பிறகு எந்த போட்டியிலும் ஆடவில்லை. காயத்தில் இருந்து தேறி விட்ட அவர், உடல்தகுதியை நிரூபிக்க உள்ளூர் போட்டியில் விளையாட உள்ளார். இதன்படி விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில், மும்பை அணிக்காக 4-ந்தேதி (ஆந்திராவுக்கு எதிராக) மற்றும் 6-ந்தேதி (கோவாவுக்கு எதிராக) நடைபெறும் ஆட்டங்களில் களம் காண இருப்பதாக அவர் கூறியுள்ளார். இவ்விரு ஆட்டங்களும் சென்னையில் நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்