உங்களாலும் முடியும்... இந்திய வேகப்பந்து வீச்சாளருக்கு கிளென் மெக்ராத் அறிவுரை
ஷமி, சிராஜ், பும்ரா ஆகியோர் அடங்கிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு கூட்டணி சிறப்பாக இருப்பதாக கிளென் மெக்ராத் பாராட்டியுள்ளார்.;
சிட்னி,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், மற்ற அனைத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதில் தர்மசாலாவில் நடைபெற்ற 5-வது மற்றும் கடைசி போட்டியில் 2 விக்கெட்டுகள் எடுத்த இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சளார் என்ற மாபெரும் உலக சாதனை படைத்தார். இந்த சாதனையை அவர் தனது 41-வது வயதில் நிகழ்த்தி உள்ளார்.
இந்நிலையில் ஷமி, சிராஜ், பும்ரா ஆகியோர் அடங்கிய இந்திய அணியின் தற்போதைய வேகப்பந்து வீச்சு கூட்டணி சிறப்பாக இருப்பதாக ஆஸ்திரேலிய ஜாம்பவான் கிளென் மெக்ராத் பாராட்டியுள்ளார் அதில் 2023 உலகக்கோப்பையில் காயத்தை சந்தித்த முகமது ஷமி குணமடைந்த பின் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சனை பார்த்து உத்வேகத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் மெக்ராத் பேசியது பின்வருமாறு:- "அடுத்த தலைமுறை எப்படி வருகிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். பும்ரா இன்னும் நிறைய விளையாட வேண்டும். ஷமி கொஞ்சம் வயதாகியுள்ளார். சமீப காலங்களில் விளையாடும் சிராஜ் இன்னும் நிறைய விளையாட வேண்டும். எனவே இந்திய அணியின் தற்போதைய வேகப்பந்து வீச்சு கூட்டணிக்கு இன்னும் நேரம் இருக்கிறது. ஷமி போன்றவர் காயத்தை சந்தித்துள்ளது மிகவும் கடினமாகும்.
இருப்பினும் அவரிடம் தேவையான அளவு அனுபவம் இருக்கிறது. நல்ல பவுலரான அவர் நீண்ட காலமாக விளையாடி வருகிறார். ஆனால் நீங்கள் வயதாகும்போது கடினமாக பயிற்சிகள் செய்து சிறப்பாக விளையாட உத்வேகம் தேவைப்படும். அது போன்ற சமயத்தில் நீங்கள் 41 வயதிலும் 700 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்து இன்னும் நன்றாக பந்து வீசும் ஜேம்ஸ் ஆண்டர்சனை பார்க்க வேண்டும். அந்த வகையில் தயாரானால் உங்களால் எப்போதும் சிறப்பாக செயல்பட முடியும். வேகப்பந்து வீச்சாளர்கள் வயது அதிகரிக்கும்போது உடலளவில் கடினத்தை சந்திப்பார்கள்" என்று கூறினார்.