உலக கோப்பை டி20 கிரிக்கெட்: வங்காளாதேசம்-ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதல்

இன்றைய ஆட்டத்தில் தோற்கும் அணிக்கு அரைஇறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி விடும்.

Update: 2022-10-29 23:44 GMT

பிரிஸ்பேன்,

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று பிரிஸ்பேனில் நடைபெறும் ஆட்டத்தில் ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்காளதேச அணி, கிரேக் எர்வின் தலைமையிலான ஜிம்பாப்வேயை (குரூப் 2) எதிர்கொள்கிறது.

வங்காளதேச அணி தனது முதலாவது ஆட்டத்தில் 9 ரன் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது. அடுத்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் பணிந்தது.

அதே சமயம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் தோல்வியின் பிடியில் இருந்த போது மழை பெய்ததால் தப்பி பிழைத்த ஜிம்பாப்வே அணி அடுத்த ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்டு ஒரு ரன் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தானை வீழ்த்தி அதிர்ச்சியளித்தது.

இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதில் தோற்கும் அணிக்கு அரைஇறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி விடும். இவ்விரு அணிகளும் இதுவரை 20 ஓவர் போட்டியில் 19 முறை சந்தித்துள்ளன. இதில் 12-ல் வங்காளதேசமும், 7-ல் ஜிம்பாப்வேயும் வெற்றி பெற்றுள்ளன.

ஜிம்பாப்வே அணி தனது எழுச்சியை நீட்டிக்க முயற்சிக்கும். அதேநேரத்தில் 2-வது வெற்றியை ருசித்து அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க வங்காளதேசம் வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

Tags:    

மேலும் செய்திகள்