உலகக்கோப்பை கிரிக்கெட்; 'ஹிட்மேன்' ரோகித் சர்மா வரலாற்று சாதனை!
உலகக்கோப்பை கிரிக்கெட்டின் முதலாவது அரையிறுதியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.
மும்பை,
10 அணிகள் பங்கேற்ற 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடித்த இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்பட 6 அணிகள் வெளியேறின.
இந்த நிலையில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) அரங்கேறும் முதலாவது அரையிறுதியில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, நியூசிலாந்து அணியுடன் விளையாடி வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினர். இதில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 29 பந்துகளில் 4 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் உட்பட 47 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இந்த ஆட்டத்தில் அடித்த 4 சிக்சர்களையும் சேர்த்து ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் அவரது சிக்சர் எண்ணிக்கை 50-ஆக பதிவானது. இதன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் 49 சிக்சர்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது தற்போது ரோகித் அதனை தகர்த்து புதிய சாதனை படைத்துள்ளார்.