ஐ.பி.எல். அணிகளின் உரிமையாளர்களால் உலக கிரிக்கெட்டுக்கு ஆபத்து - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் எச்சரிக்கை

ஐ.பி.எல். அணிகளின் உரிமையாளர்கள் பல வெளிநாட்டு லீக் தொடர்களிலும் புதிய அணிகளை வாங்கியுள்ளனர்.

Update: 2024-08-12 01:37 GMT

சிட்னி,

இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.க்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதனால் சர்வதேச கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது. அதேபோல ஐ.பி.எல். தொடரில் அணிகளை வாங்கிய உரிமையாளர்களும் தற்போது பன்மடங்கு வளர்ந்துள்ளனர்.

அதனால் வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, அமீரகம் போன்ற வெளிநாடுகளில் நடைபெறும் டி20 தொடர்களில் ஐ.பி.எல். அணியின் உரிமையாளர்கள் தங்களுடைய கிளை அணிகளை வாங்கியுள்ளனர்.

இந்நிலையில் இப்படி ஐ.பி.எல். அணிகளின் உரிமையாளர்களை வளரவிட்டால் வருங்காலங்களில் வீரர்கள் நாட்டுக்காக விளையாடுவதை விட டி20 கிரிக்கெட்டில் விளையாட அதிகம் முன்னுரிமை கொடுப்பார்கள் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் எச்சரித்துள்ளார். எனவே வெளிநாட்டு வாரியங்கள் இதை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "ஐ.பி.எல். உரிமையாளர்கள் ஏற்கனவே அமீரகம், அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் விளையாடும் உள்ளூர் டி20 அணிகளில் அதிக பங்குகளை வைத்திருக்கிறார்கள். அதனால் இந்த விளையாட்டை நடத்துவதில் அவர்கள் அதிக பங்கு வகிக்கும் போக்கு வேகமாக அதிகரித்து வருகிறது. புத்திசாலித்தனமான உரிமையாளர்கள் சிறந்த வீரர்களை நீண்ட ஒப்பந்தங்களில் தங்களுக்காக விளையாட கையெழுத்திட தொடங்கியுள்ளனர். இது கிரிக்கெட் நிர்வாகங்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதனால் வீரர்கள் தங்களுடைய நாட்டு வாரியத்தை விட ஐ.பி.எல். உரிமையாளர்களிடம் ஈடுபாட்டில் இருக்கக்கூடும்.

பெரும்பாலான நாடுகளில் விளையாட்டுக்கு பணம் தேவைப்படும் நிலையில் ஐ.பி.எல். உரிமையாளர்களிடம் அதிகமான நிதி இருக்கிறது. அதனால் இப்படி நடப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் இங்கே கடந்த சில தசாப்தத்திற்கு முன்பாகவே விளையாட்டுக்கான நீண்ட கால வரைபடத்தை அந்தந்த நாட்டு வாரியங்கள் உருவாக்கத் தவறியதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதை சமாளிக்க அவர்கள் குறைந்தபட்ச திட்டத்தை வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் வருங்காலத்தில் இந்த விளையாட்டு முழுக்க முழுக்க பணக்கார உரிமையாளர்களால் நடத்தப்படும் டி20 ஆட்டமாக மாறிவிடலாம்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்