இஷான் கிஷன் 1 ரன் அடித்ததும் டிக்ளேர் செய்தது ஏன்..? - கேப்டன் ரோகித் சர்மா பதில்

வெஸ்ட் இண்டீஸ்-க்க்லு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.;

Update:2023-07-15 11:17 IST

Image Courtesy: AFP

டொமினிகா,

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி  2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலாவதாக டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று நிறைவடைந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ஜெய்ஸ்வால் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் அறிமுக வீரர்களாக களம் இறங்கினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் 171 ரன் குவித்து மேன் ஆப் தை மேட்ச் விருதை பெற்றார். இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 150 ரன்னுக்கு சுருண்டது. அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 421 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணி 405 ரன்கள் எடுத்திருந்தபோது விராட் கோலியின் விக்கெட்டை இழந்தது. அதனை தொடர்ந்து ஏழாவது வீரராக களமிறங்கிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் தனது முதல் ரன்னை எடுக்க 20 பந்துகளை எடுத்துக் கொண்டார்.

20-ஆவது பந்தை சந்தித்த அவர் ஒரு ரன் எடுத்து மறுபுறம் சென்றபோது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆட்டத்தை டிக்ளேர் செய்வதாக அறிவித்து வீரர்களை ஓய்வறைக்கு அழைத்தார்.

இந்நிலையில் இஷான் கிஷன் ஒரு ரன் அடித்ததும் டிக்ளேர் அறிவித்தது ஏன் என்பது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில்,

நாங்கள் ஒவ்வொரு ஓவரின் இடைவெளியின் போதும் டிக்ளரேஷன் குறித்த தெளிவான தகவலை மைதானத்தில் இருந்த வீரர்களுக்கு தெரிவித்தபடி தான் இருந்தோம். இருந்தாலும் இஷான் கிஷன் ஒரு ரன்னை எடுக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன்.

ஏனெனில் பேட்டிங் செய்ய மைதானத்தில் களமிறங்கிய அவர் ஒரு ரன் எடுக்காமல் டிக்ளேர் செய்தால் அது அழகல்ல. எனவே முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகியுள்ள அவர் பேட்டிங்கிற்கு வந்து ஒரு ரன்னாவது எடுக்க வேண்டும் என்று விரும்பினேன்.

அதோடு இஷான் கிஷனும் எப்போதுமே தன்னுடைய பேட்டிங்கில் ஆர்வமாக இருக்கிறார். அதன் காரணமாகவே அவரை ஒரு ரன் அடிக்கவிட்டு அதன் பிறகு டிக்ளேர் செய்வதாக அறிவித்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்