தொடர்ச்சியாக 5-வது வெற்றியை பெறப்போவது யார்? இந்தியா-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தர்மசாலாவில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Update: 2023-10-22 00:09 GMT

Image Courtacy: BCCITwitter

தர்மசாலா,

உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் மலைவாசஸ்தலமான தர்மசாலாவில் உள்ள இமாசலபிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் 21-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, நியூசிலாந்துடன் மோதுகிறது.

இந்திய அணி இதுவரை ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகளை அடுத்தடுத்து துவம்சம் செய்து சூப்பரான நிலையில் இருக்கிறது. பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா (265 ரன்கள்), விராட்கோலி (259 ரன்கள்), லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யரும், பந்து வீச்சில் பும்ரா (10 விக்கெட்) ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது சிராஜூம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.



 20 ஆண்டு ஏக்கத்தை தீர்க்குமா இந்தியா

வங்காளதேசத்துக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் கணுக்காலில் காயம் அடைந்த ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இன்றைய ஆட்டத்தில் ஆடமுடியாதது இந்திய அணிக்கு பெருத்த பின்னடைவாகும். அவரால் ஏற்பட்டு இருக்கும் வெற்றிடத்தை இந்திய அணி எப்படி நிரப்ப போகிறது என்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் நல்ல பங்களிப்பை அளிக்கக்கூடிய அவருக்கு பதிலாக பேட்ஸ்மேனா அல்லது பவுலரா யார் ஆடும் லெவனில் இடம் பிடிப்பார் என்பது உறுதியாக தெரியவில்லை. பேட்ஸ்மேனாக இருந்தால் சூர்யகுமார் யாதவும் பந்து வீச்சாளராக இருந்தால் முகமது ஷமி அல்லது அஸ்வின் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. 



உலகக் கோப்பை தொடரில் கடைசியாக இந்திய அணி 2003-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் சூப்பர் சிக்ஸ் சுற்று ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இருந்தது. அதன் பிறகு நியூசிலாந்து அணியிடம் 2007, 2016, 2021-ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியிலும், 2019-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் அரைஇறுதியிலும், 2021-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது. ஐ.சி.சி. உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக கடந்த 20 ஆண்டுகளாக வெற்றி பெற முடியாத ஏக்கத்தை தீர்க்க இந்திய அணிக்கு இது நல்ல வாய்ப்பாகும்.



 நியூசிலாந்து எப்படி?

பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பலம் பொருந்தியதாக விளங்கும் நியூசிலாந்து அணி தனது முதல் 4 ஆட்டங்களிலும் வெற்றி வாகை சூடி புள்ளிபட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. அந்த அணி, இங்கிலாந்து, நெதர்லாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளை அடுத்தடுத்து போட்டு தாக்கி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

நியூசிலாந்து அணியில் பேட்டிங்கில் டிவான் கான்வே (249 ரன்கள்), ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், வில் யங், பொறுப்பு கேப்டன் டாம் லாதமும், பந்து வீச்சில் மிட்செல் சான்ட்னெர் (11 விக்கெட்), மேட் ஹென்றி, லோக்கி பெர்குசன், டிரென்ட் பவுல்ட்டும் அசத்தி வருகிறார்கள்.

தங்களது முதல் 4 ஆட்டங்களிலும் தோல்வியை சந்திக்காமல் வலுவான நிலையில் இருக்கும் இரு அணிகளும் தொடர்ச்சியாக 5-வது வெற்றியை ருசித்து அரைஇறுதியை நெருங்க கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

சர்வதேச ஒருநாள் போட்டியில் இவ்விரு அணிகளும் 116 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 58-ல் இந்தியாவும், 50-ல் நியூசிலாந்தும் வென்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் டை ஆனது. 7 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போனது. உலகக் கோப்பையில் இரு அணிகளும் 9 முறை மோதியதில் நியூசிலாந்து 5 ஆட்டங்களில் வென்று முன்னிலை வகிக்கிறது. இந்தியா 3 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ளது. ஒரு ஆட்டம் மழையால் 'டாஸ்' போடப்படாமல் கைவிடப்பட்டது.

பேட்டிங் மற்றும் பந்து வீச்சுக்கு சரிசமமாக கைகொடுக்கும் தர்மசாலா ஆடுகளத்தில் அரங்கேறும் இந்த மோதலில் சமபலம் வாய்ந்த இவ்விரு அணிகளில் யாருடைய கைஓங்கும் என்று கணிப்பது கடினமான காரியமாகும்.

தர்மசாலாவில் வானம் மேகமூட்டமாக இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்து இருப்பதால் வேகப்பந்து வீச்சு எடுபட அதிக வாய்ப்புள்ளது.

பிற்பகல் 2 மணிக்கு...

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட்கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ரவீந்திர ஜடேஜா, சூர்ய குமார் யாதவ் அல்லது இஷான் கிஷன், ஷர்துல் தாக்குர் அல்லது முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.

நியூசிலாந்து: டிவான் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டாம் லாதம் (கேப்டன்), டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னெர், மேட் ஹென்றி, லோக்கி பெர்குசன், டிரென்ட் பவுல்ட்.

பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.




 விறுவிறுப்பு நிறைந்த போட்டியாக இருக்கும் - டாம் லாதம்

நியூசிலாந்து அணியின் பொறுப்பு கேப்டன் டாம் லாதம் கூறுகையில், 'இந்தியா அருமையான அணியாகும். நீண்ட காலமாக அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். எங்கு நடந்தாலும் இரு அணிகளுக்கும் இடையிலான எல்லாவிதமான ஆட்டங்களும் விறுவிறுப்பாக இருந்து இருக்கிறது. இந்த உலகக் கோப்பையிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. அதேபோல் நாங்களும் நன்றாக ஆடி வருகிறோம். எனவே இன்றைய ஆட்டமும் விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும் என்று நம்புகிறேன். இரு அணியிலும் பேட்டிங் மற்றும் பவுலிங் வலுவாக இருக்கிறது. எனவே இந்த ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பவுலிங்குக்கு இடையே கடும் போட்டி நிலவும் எனலாம். நாங்கள் இந்த போட்டியை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்