ஸ்காட்லாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா வேண்டுமென்றே தோற்றால் என்ன நடக்கும்? ஐ.சி.சி. விதி கூறுவது என்ன..?

இங்கிலாந்தை லீக் சுற்றுடன் வெளியேற்றுவதற்கான வேலையை ஸ்காட்லாந்து போட்டியில் ஆஸ்திரேலியா செய்யும் என்று ஜோஸ் ஹேசல்வுட் தெரிவித்திருந்தார்.

Update: 2024-06-14 11:00 GMT

நியூயார்க்,

20 அணிகள் கலந்து கொண்டுள்ள 9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து, இங்கிலாந்து, ஓமன் மற்றும் நமீபியா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்த பிரிவில் ஆஸ்திரேலியா விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

அதே பிரிவில் 3 போட்டிகளில் 5 புள்ளிகளை பெற்றுள்ள ஸ்காட்லாந்து 2வது இடத்தை பிடித்து சூப்பர் 8 சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை அதிகமாக வைத்துள்ளது. ஆனால் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி மற்றும் ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில் 3 புள்ளிகளுடன் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது. இங்கிலாந்து சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற கடைசி போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

அதேவேளையில் கடைசி போட்டிகளில் வென்றாலும் இங்கிலாந்து அணியால் 5 புள்ளிகளை மட்டுமே பெற முடியும். அப்போது ஸ்காட்லாந்து அணியை விட நெட் ரன் ரேட்டில் இங்கிலாந்து சிறப்பாக இருந்தால் மட்டுமே சூப்பர் 8 சுற்றுக்கு செல்ல முடியும். ஸ்காட்லாந்து அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வரும் 16ம் தேதி ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.

இந்நிலையில், இங்கிலாந்து தங்களுக்கு நாக் அவுட் சுற்றில் தொல்லை கொடுக்க வாய்ப்பு உள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக தாங்கள் டி20 கிரிக்கெட்டில் தடுமாறுவதாகவும் ஆஸ்திரேலிய வீரர் ஜோஸ் ஹேசல்வுட் தெரிவித்தார். எனவே இங்கிலாந்தை லீக் சுற்றுடன் வெளியேற்றுவதற்கான வேலையை ஸ்காட்லாந்து போட்டியில் ஆஸ்திரேலியா செய்யும் என்று அவர் மறைமுகமாக தெரிவித்தார்.

சொல்லப்போனால் 1999-ல் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பையில் சூப்பர் 6 சுற்றில் எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெறுவதற்காக வெறும் 111 ரன்கள் இலக்கை சேசிங் செய்ய 40.4 ஓவர்கள் எடுத்துக்கொண்ட ஆஸ்திரேலியா வேண்டுமென்றே மெதுவாக விளையாடியது. எனவே இம்முறை இங்கிலாந்தை வெளியேற்ற ஆஸ்திரேலிய அணி ஸ்காட்லாந்திடம் தோற்பதற்கும் தயங்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அதை செய்வதற்கு ஐ.சி.சி. ஆர்ட்டிக்கல் 2.11 விதிமுறையை ஆஸ்திரேலியா மீற வேண்டும். அதாவது " ஒரு அணி வேண்டுமென்றே ஐ.சி.சி. தொடரின் லீக் போட்டியில் தோல்வியடையும்போது மற்ற அணிகளின் நிலைகள் பாதிக்கும்" என்பது 2.11 விதிமுறையாகும்.

இதை மீறி வேண்டுமென்றே எதாவது செய்தால் அந்த அணியின் கேப்டனுக்கு 4 கருப்பு புள்ளிகள், 50 சதவீதம் அபராதம் மற்றும் 2 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும். எனவே இங்கிலாந்தை வெளியேற்ற முயற்சித்தால் சூப்பர் 8 சுற்றின் முதலிரண்டு போட்டிகளில் கேப்டன் மிட்சேல் மார்ஷ் விளையாட தடை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்