நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இலங்கை

இலங்கை அணி முதல் இன்னிங்சில் 602 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது.

Update: 2024-09-28 11:29 GMT

காலே,

இலங்கை - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 'டாஸ்' ஜெயித்த இலங்கை கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

அதன்படி முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 602 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கமிந்து மென்டிஸ் 182 ரன்களும், குசல் மென்டிஸ் 106 ரன்களும் அடித்தனர். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 2-வது நாள் முடிவில் 14 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழந்து 22 ரன்கள் எடுத்திருந்தது. வில்லியம்சன் 6 ரன்களுடனும், அஜாஸ் படேல் ரன் எதுவுமின்றியும் களத்தில் இருந்தனர். இந்நிலையில் 3வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.

இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி இலங்கையின் சுழலில் சிக்கியது. அதிலும் மிகச்சிறப்பாக பந்துவீசிய பிரபாத் ஜெயசூர்யாவிடம் நியூசிலாந்து வீரர்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதில் வில்லியம்சன் 7 ரன், அஜாஸ் படேல் 8 ரன், ரச்சின் ரவீந்திரா 10 ரன், டேரில் மிட்செல் 13 ரன், டாம் பிளெண்டன் 1 ரன், டிம் சவுதி 2 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

இறுதியில் நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 39.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 88 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் சாண்ட்னெர் 29 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதன் மூலம் பாலோ ஆனை சந்தித்த நியூசிலாந்து 514 ரன்கள் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை ஆடி வருகிறது. 2-வது இன்னிங்சிலும் தடுமாறி வரும் அந்த அணி 199 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது போதிய வெளிச்சம் இன்மை காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் மழை பெய்ததன் காரணமாக இன்றைய ஆட்டம் அத்துடன் ரத்து செய்யப்பட்டது.

டாம் பிளண்டெல் 47 ரன்களுடனும், கிளென் பிலிப்ஸ் 32 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை தரப்பில் நிஷான் பெய்ரிஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

நியூசிலாந்து இன்னும் 315 ரன்கள் பிந்தங்கி உள்ள நிலையில் கைவசம் 5 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளது. இதனால் இந்த போட்டியில் இலங்கை இன்னிங்ஸ் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.

இத்தகைய சூழலில் நாளை 4-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்