நட்சத்திர அந்தஸ்தை மறந்து விட்டு விளையாடுங்கள் - விராட் கோலிக்கு முன்னாள் பயிற்சியாளர் அட்வைஸ்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி தடுமாற்றமாக செயல்பட்டு வருகின்றார்.

Update: 2024-12-21 12:19 GMT

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது போட்டி வரும் 26-ம் தேதி தொடங்க உள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் சதமடித்து இந்தியாவின் வெற்றிக்கு உதவிய நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி அதற்கடுத்த போட்டிகளில் மீண்டும் ரன் குவிக்க முடியாமல் போராடி வருகிறார். குறிப்பாக அவுட் சைடு ஆப் பந்துகளில் விக்கெட்டை தாரை வார்த்து வருகிறார். இதனால் அவர் மீண்டும் பார்முக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

இந்நிலையில் நீங்கள் நட்சத்திர பேட்ஸ்மேன் என்ற அந்தஸ்தை மறந்து விட்டு 4வது போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட்டிடம் சரணடைந்து விளையாடுங்கள் என்று விராட் கோலிக்கு முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "சில நேரங்களில் பேட்ஸ்மேனாக நீங்கள் உங்களுடைய நட்சத்திர அந்தஸ்தை கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொள்வது அவசியம். இந்த விளையாட்டிடம் கொஞ்சம் சரணடைந்து களத்தில் கொஞ்சம் நேரத்தை செலவிடுங்கள். அப்போது உங்களைத் தேடி பவுலர்கள் வருவார்கள். நீங்கள் அவர்களை தேடி செல்லாதீர்கள். அது தான் பெரிய வீரருக்கான அறிகுறி.

மெல்போர்ன் மைதானத்தில் விராட் கோலி சிறந்த நினைவுகளை கொண்டுள்ளார். 2014இல் அவர் இங்கே 169 ரன்கள் குவித்த இந்த மைதானத்தில் போட்டியை பார்த்து ரசிகர்கள் வருவார்கள். விராட் கோலி ரசிகர்களுக்கு முன்பு அசத்தக்கூடியவர். எனவே இது அவருக்கான இடம். உங்களுடைய நட்சத்திர அந்தஸ்தை கொஞ்சம் கட்டுப்பாட்டில் வையுங்கள். முடிந்தளவுக்கு உங்களுடைய கால்களுக்கு அருகில் நிறைய பந்துகளை எதிர்கொள்ளுங்கள்.

அதை செய்தால் ரன்கள் தாமாக வரும். விராட் கோலி ரன்கள் அடிக்கவில்லை என்று அர்த்தமில்லை. 3 இன்னிங்ஸ் முன்பாகத்தான் அவர் சதமடித்தார். அதற்கு முன்பாக பெங்களூருவில் அவர் நியூசிலாந்துக்கு எதிராக 70 ரன்கள் குவித்தார். எனவே தனது கால்களுக்கு அருகில் பேட்டை வைத்து விளையாடினால் அவுட் சைட் ஆப் ஸ்டம்ப் பந்துகளில் அவர் அவுட்டானது எல்லாம் தாமாக அழிந்து போகும் என்று நான் கருதுகிறேன்" என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்