ஒருவேளை பாண்ட்யா அதை விரும்பினால் இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல செய்தி - ஹனுமா விஹாரி

ஹர்திக் பாண்ட்யா 2018-க்கு பின் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை.

Update: 2024-09-28 11:08 GMT

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா 2016-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 86 ஒருநாள் போட்டிகள், 102 டி20 போட்டிகள் மற்றும் 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதிரடியான பேட்ஸ்மேனாக திகழும் பாண்ட்யா வேகப்பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்படக்கூடியர் என்பதனால் நட்சத்திர ஆல்ரவுண்டராக இந்திய அணியில் முக்கிய வீரராக இடம் பிடித்து விளையாடுகிறார்.

ஆனாலும் அடிக்கடி காயத்தை சந்திப்பதால் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 2018-ம் ஆண்டிற்கு பிறகு இதுவரை விளையாடவில்லை. இதனிடையே சமீப காலமாகவே ரெட் பாலில் அவர் தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருவதால் அவர் மீண்டும் இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்புகிறாரோ என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

ஒருவேளை ஹர்திக் பாண்ட்யா டெஸ்ட் கிரிக்கெட்டில் நாட்டுக்காக விளையாடினால் 2024 - 25 ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்தியாவை அசைக்க முடியாது என ஹனுமா விஹாரி தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-"பாண்ட்யா டெஸ்ட் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுப்பாரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அதை அவர் விரும்பினால் அது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல செய்தி. அவரைப் போன்றவர் விளையாடுவது ஆஸ்திரேலியாவின் பெர்த் அல்லது அடிலெய்டு மைதானங்களில் நடைபெற உள்ள பிங்க் போட்டிகளில் எக்ஸ்ட்ரா வேகப்பந்து வீச்சு வாய்ப்பை கொடுத்து இந்தியாவை பலமடைய வைக்கும். எனவே டெஸ்டில் கம்பேக் கொடுக்க விரும்புகிறாரா இல்லையா என்பது பாண்ட்யாவை பொறுத்தது.

ஒருவேளை விரும்பினால் அவர் சில ரஞ்சிக் கோப்பையில் போட்டியில் விளையாட வேண்டும். ஏனெனில் ஒருநாள், டி20 கிரிக்கெட்டை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்து வீசும் போது அதிக பளு ஏற்படும். ஷர்துல் தாக்கூரை ஏற்கனவே நாம் சோதித்தோம். ஆனால் கடந்த துலீப் கோப்பையில் அவருடைய செயல்பாடுகளும் புள்ளிவிவரங்களும் நன்றாக இல்லை. இருப்பினும் இந்திய அணியின் கலவையில் அவர் இருக்கக்கூடும். ஆனால் ஹர்திக் பாண்ட்யா கம்பேக் கொடுக்க விரும்பினால் அவர் தான் நம்முடைய நம்பர் 1 தேர்வாக இருப்பார்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்