பாக்சிங் டே டெஸ்ட்: கேப்டன் ரோகித் சர்மா களமிறங்குவாரா..? வெளியான முக்கிய தகவல்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் நாளை மறுதினம் தொடங்க உள்ளது.
மெல்போர்ன்,
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதுவரை நடந்துள்ள 3 டெஸ்ட் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நாளை மறுதினம் (வியாழக்கிழமை) இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு தொடங்குகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் 'பாக்சிங் டே' என்ற பாரம்பரிய சிறப்புடன் தொடங்கும் இதையொட்டி இந்திய வீரர்கள் கடந்த 21-ந்தேதியில் இருந்து அங்கு பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே நேற்று முன்தினம் பயிற்சியின்போது இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பந்து தாக்கி இடதுகால் முட்டியில் காயம் ஏற்பட்டது. வீக்கத்தை குறைக்க இரவிலும் ஐஸ்கட்டி ஒத்தடம் போட வேண்டி இருந்தது. இதனால் அவர் 4-வது போட்டியில் களமிறங்குவாரா? என்ற கேள்வி காணப்பட்டன.
இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் தனக்கு ஏற்பட்ட காயம் குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், "வலைப்பயிற்சியின்போது எனக்கு காயம் ஏற்பட்டது உண்மைதான். ஆனால் தற்போது நான் நலமுடன் உள்ளேன்" என்று கூறினார்.
இதனால் அவர் 4-வது போட்டியில் களமிறங்குவது உறுதியாகி உள்ளது.