பாக்சிங் டே டெஸ்ட்: ஆஸ்திரேலியாவின் ஆடும் அணியில் இடம்பெறும் அறிமுக வீரர்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் 26-ம் தேதி தொடங்க உள்ளது.
மெல்போர்ன்,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. 3 டெஸ்ட் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் 'பாக்சிங் டே' என்ற பாரம்பரிய சிறப்புடன் தொடங்கும் இந்த போட்டிக்காக இந்திய வீரர்கள் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கடைசி 2 போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இதில் முதல் போட்டியில் அறிமுகம் ஆன நாதன் மெக்ஸ்வீனி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக 19 வயதான சாம் கான்ஸ்டாஸ் அறிமுக வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கான்ஸ்டாஸ் இந்தியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் சதமடித்திருந்தார். அதன் காரணமாக அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
இந்நிலையில் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியின் ஆஸ்திரேலியாவின் ஆடும் அணியில் (பிளேயிங் வெவனில்) சாம் கான்ஸ்டாஸ் இடம்பெறுவார் என்று பயிற்சியாளர் மெக்டொனால்டு அறிவித்துள்ளார்.