அணிக்காக எல்லா வகையிலும் மிகச்சிறந்த முயற்சியை வெளிப்படுத்தும் ஆவலில் உள்ளேன் - விருந்தா தினேஷ் பேட்டி

ரூ.1.30 கோடிக்கு ஏலம் போன விருந்தா தினேஷ், பெற்றோருக்கு கார் பரிசாக வாங்கிக் கொடுப்பேன் என்று கூறினார்.

Update: 2023-12-11 01:12 GMT

image courtesy: Vrinda Dinesh twitter

மும்பை,

பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான (டபிள்யூ.பி.எல்.) வீராங்கனைகளின் ஏலத்தில் இந்திய இளம் பேட்டர் விருந்தா தினேஷ் ரூ.1 கோடியே 30 லட்சத்துக்கு உ.பி. வாரியர்ஸ் அணிக்கு வாங்கப்பட்டார். அடிப்படை விலை ரூ.10 லட்சத்தில் இருந்து ஆரம்பித்து தொகை கோடியை தாண்டியது. கர்நாடகாவைச் சேர்ந்த விருந்தா சர்வதேச போட்டியில் விளையாடியது கிடையாது. ஆனாலும் இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் போயிருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

தனது 13 வயதில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய விருந்தா தினேஷ் தற்போது பெண்கள் 23 வயதுக்குட்பட்டோருக்கான கர்நாடகா அணியில் இடம் பிடித்துள்ளார். தொடக்க வீராங்கனையாக களம் இறங்கும் விருந்தா ராய்ப்பூரில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அவர் பேட்டியின்போது கூறியதாவது:-

நான் 1.30-க்கு ஏலம் போயிருப்பதாக சக வீராங்கனை சொன்னதும் பூரிப்பில் துள்ளி குதித்தேன். என்னது.... ரூ.1.30 லட்சமா? என்று கேட்டேன். இல்லை ரூ.1.30 கோடி என்றதும் நம்ப முடியவில்லை. அடிப்படை விலை ரூ.10 லட்சம் என்பதால் ரூ.1.30 லட்சம் என்பது ஏலத்தில் வராது என்பது தெரியும். ஆனால் உணர்ச்சி வேகத்தில் அவ்வாறு கேட்டேன். பிறகு சக வீராங்கனைகள் அனைவரும் என்னை கட்டித் தழுவி வாழ்த்து தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து எனது தாயாரை தொடர்பு கொண்டு போனில் பேசினேன். அவர் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் அழுதது அவரது தளர்வற்ற குரலில் தெரிந்தது. அதை பார்க்க வேண்டாம் என்றுதான் வீடியோ கால் செய்யவில்லை.

எனது பெற்றோர் உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். எனது கிரிக்கெட் வாழ்க்கைக்காக அவர்கள் செய்த தியாகம் ஏராளம். அவர்களை பெருமைப்படுத்த விரும்புகிறேன். எனது பெற்றோருக்கு சொந்த காரில் செல்ல வேண்டும் என்பது கனவு. எனக்கு கிடைக்கும் பணத்தில் இருந்து அவர்களுக்கு கார் வாங்கிக் கொடுப்பேன். அதுதான் எனது முதல் இலக்கு. அதிக தொகைக்கு விலை போனதால் நெருக்கடி இருப்பதாக நினைக்கவில்லை. களத்தில் இறங்கி உற்சாகமாக ஆடுவேன். அலிசா ஹீலியின் கேப்டன்ஷிப்பில் விளையாடப்போகிறேன். தாலியா மெக்ராத், டேனி வியாட், சோபி எக்லெஸ்டோன் ஆகியோரும் உ.பி. வாரியர்ஸ் அணியில் உள்ளனர். இவர்களுடன் எல்லாம் இணைந்து விளையாடுவேன் என்று கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை.

உள்ளூர் வீராங்கனை என்ற வகையில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் விளையாட ஆசைப்பட்டேன். ஆனால் எந்த அணி வாங்கினாலும், அந்த அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது உ.பி. வாரியர்ஸ் அணி வாங்கி இருக்கிறது. அந்த அணிக்காக எல்லா வகையிலும் மிகச்சிறந்த முயற்சியை வெளிப்படுத்தும் ஆவலில் உள்ளேன்.' என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்