சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் தாமஸ் இடைநீக்கம்
முறைகேடு குறித்து 14 நாட்களுக்குள் பதில் அளிக்கும்படி ஐ.சி.சி. உத்தரவிட்டுள்ளது;
துபாய், -
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் டெவோன் தாமஸ் சூதாட்ட சர்ச்சையில் சிக்கியுள்ளார். இலங்கையில் நடக்கும் லங்கா பிரிமீயர் லீக் (எல்.பி.எல்.), அபுதாபியில் நடக்கும் 10 ஓவர் லீக், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் நடத்தும் கரீபியன் பிரிமீயர் லீக் (சி.பி.எல்.) ஆகிய போட்டிகளில் விளையாடிய போது முறைகேட்டில் ஈடுபட்டதாக 7 பிரிவுகளில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளது.
இதில் 2021-ம் ஆண்டில் லங்கா பிரிமீயர் லீக்கில் கண்டி வாரியர்ஸ் அணிக்காக ஆடிய போது, ஒரு ஆட்டத்தின் முடிவை மாற்றும் வகையில் மேட்ச் 'பிக்சிங்'கில் ஈடுபட முயற்சித்தது முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது. இதையடுத்து அவரை இடைநீக்கம் செய்துள்ள ஐ.சி.சி. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளது. ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு பிரிவின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவோம் என்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது.
33 வயதான டெவோன் தாமஸ் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஒரு டெஸ்ட், 21 ஒரு நாள் போட்டி மற்றும் 12 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அடுத்த மாதம் சார்ஜாவில் நடக்குமம் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பெற்றிருந்தார். இனி அவரால் விளையாட முடியாது. முறைகேடு குறித்து 14 நாட்களுக்குள் பதில் அளிக்கும்படி ஐ.சி.சி. உத்தரவிட்டுள்ளது