ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்காவுக்கு இடையிலான போட்டியின் போது மறைந்த வார்னேவுக்கு மரியாதை
மெல்போர்ன் மைதானத்தில் ஒரு கேலரிக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.;
மெல்போர்ன்,
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே கடந்த மார்ச் மாதம் தாய்லாந்துக்கு விடுமுறையை கழிக்க சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
அவரது மறைவுக்கு பிறகு மெல்போர்னில் அரங்கேறும் முதல் டெஸ்ட் இதுவாகும். இது அவரது சொந்த ஊர் மைதானமாகும். இங்கு தான் ஷேன் வார்னே தனது 700-வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார். இந்த மைதானத்தில் ஒரு கேலரிக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அவருக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் போட்டி தொடங்கும் முன்பாக இரு அணியினரும் வார்னேவுக்கு பிடித்தமான வட்டவடிவ வெள்ளைநிற தொப்பியை அணிந்தனர். ஏராளமான ரசிகர்களும் அத்தகைய தொப்பியுடன் வலம் வந்தனர். மேலும் மைதானத்திற்குள் ஒரு பகுதியில் 'வார்னி 350' (வார்னேவின் டெஸ்ட் போட்டிக்குரிய எண்) என்று வர்ணம் தீட்டப்பட்டிருந்தது.
அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் சரியாக மாலை 3.50 மணிக்கு ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. வீரர்களும், குழுமியிருந்த 64 ஆயிரத்திற்கு மேற்பட்ட ரசிகர்களும் ஒரு சேர கைதட்டி உணர்வை வெளிப்படுத்தினர். அத்துடன் 'வார்னி.... வார்னி.....' என்று அவரது செல்லப்பெயரை உச்சரித்து ரசிகர்கள் உணர்வுபூர்வமாக மரியாதை செலுத்தினர்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த வீரர்கள் தேர்வுசெய்யப்பட்டு விருது வழங்கப்படுகிறது. இதில் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருது வார்னேவின் பெயரில் வழங்கப்படும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கமும் நேற்று அறிவித்தன.