சர்வதேச டி20 கிரிக்கெட்: 2-வது முறையாக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி டிம் சவுத்தி சாதனை

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Update: 2022-11-20 11:22 GMT

Image Tweeted By ICC

மவுன்ட் மாங்கானு,

இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. இரு அணிகள் இடையே வெல்லிங்டனில் நேற்று முன்தினம் நடைபெற இருந்த முதல் 20 ஓவர் போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், 2-வது போட்டி மவுண்ட் மாங்கானுவில் இன்று நடைபெற்றது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சூர்யகுமார் யாதவின் அதிரடி சதத்தால் 20 ஓவர்கள் முடிவில் 191 ரன்களை குவித்தது. நியூசிலாந்து தரப்பில் டிம்சவுத்தி 3 விக்கெட்களும், பெர்குசன் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்களை பறிகொடுத்தனர். இறுதியில் அந்த அணி 18.5 ஓவர்களுக்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் போது நியூசிலாந்து வீரர் டிம் சவுத்தி இறுதி ஓவரை வீசினார். அந்த ஓவரில் ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழக்க செய்த டிம் சவுத்தி, ஹாட்ரிக் விக்கெட்களை கைப்பற்றினார்.

இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் 2 முறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 2-வது பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் இலங்கை வீரர் லசித் மலிங்கா மட்டுமே டி20 போட்டிகளில் அதிகபட்சமாக 2 முறை ஹாட்ரிக் விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். தற்போது அந்த சாதனையை டிம் சவுத்தி சமன் செய்துள்ளார்.

இதற்கு முன் டிம் சவுத்தி பாகிஸ்தானுக்கு எதிராக 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்கள் எடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்