நெதர்லாந்து அணிக்காக களமிறங்கி தென் ஆப்பிரிக்காவின் உலகக்கோப்பை கனவை தகர்த்த முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர்கள்!

இன்றைய போட்டியில் நெதர்லாந்து அணிக்காக களமிறங்கிய வீரர்கள் மூவர் தென் ஆப்பிரிக்காவிற்காக ஏற்கெனவே விளையாடியவர்கள்.

Update: 2022-11-06 16:55 GMT

மெல்போர்ன்,

இந்திய நேரப்படி காலை 5.30 மணிக்கு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - நெதர்லாந்து அணிகள் விளையாடின.இன்றைய போட்டியில் நெதர்லாந்து அணிக்காக களமிறங்கி சாதித்து காட்டிய வீரர்கள் மூவர் தென் ஆப்பிரிக்காவிற்காக ஏற்கெனவே விளையாடியவர்கள்.

இன்றைய போட்டியில் நெதர்லாந்து அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்காவின் அரையிறுதி வாய்ப்பை உடைத்தனர்.நெதர்லாந்து (டச்சு) ஹீரோக்களில் மூன்று பேருக்கு தென்னாப்பிரிக்காவுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது.

அவர்கள் மூவரும் தென் ஆப்பிரிக்க அணிக்காக முன்பு விளையாடியவர்கள். அதன் பின் அவர்கள் ஐரோப்பிய நாடான நெதர்லாந்துக்கு குடியேறி, இப்போது அவர்கள் நெதர்லாந்து அணிக்காக விளையாடுகின்றனர்.

ரோலோப் வான் டெர் மெர்வே

37 வயதான ரோலோப் வான் டெர் மெர்வே, 16 ஆண்டுகளுக்கு முன்பு தென்னாப்பிரிக்கா அணிக்காக விளையாடிய தனது அறிமுக போட்டியில் ஆட்டநாயகனாக இருந்தவர்.

இன்றைய போட்டியில் அவர் டேவிட் மில்லரின் கடினமான கேட்சை பிடித்தது போட்டியின் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. டேவிட் மில்லர் ஆட்டமிழக்கும் முன்பு வரை, தென்னாப்பிரிக்கா 15 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 112 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின், 120 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து தள்ளாடியது.

கொலின் அக்கர்மேன்

இன்றைய போட்டியில் கொலின் அக்கர்மேன் 26 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். அவருக்கும் தென்னாப்பிரிக்கா தொடர்பு உள்ளது. அவர் ஜோகன்னஸ்பர்க்கில் பிறந்தவர் மற்றும் 2010ஆம் ஆண்டு ஜூனியர் உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா யு-19 அணியின் துணை கேப்டனாக இருந்தார்.

அதன் பின், 2017ஆம் ஆண்டு லீசெஸ்டர்ஷையருடன் கவுண்டி விளையாட அவர் இங்கிலாந்து சென்றார். விரைவில் அவர் தனது டச்சு பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி நெதர்லாந்து அணிக்காக விளையாடத் தொடங்கினார். இன்றைய போட்டியில் அவர் மூன்று ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே கொடுத்து கட்டுக்கோப்பாக பந்துவீசினார்.

பிராண்டன் குளோவர்

பிராண்டன் குளோவர் 9 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிராண்டன் குளோவரும் ஜோகன்னஸ்பர்க்கில் பிறந்தவர்.

பிராண்டன் குளோவர் தென்னாப்பிரிக்கா அணியின் உதவிப் பயிற்சியாளராக இருந்த ரியான் காம்ப்பெல் மூலம் நெதர்லாந்திற்கு இடமாற்றம் செய்ய வற்புறுத்தப்பட்டார். ஏனெனில் தென்னாப்பிரிக்கா அணியில் ஏற்கெனவே ரபாடா, நார்ட்ஜே, என்கிடி மற்றும் மார்கோ ஜான்சன் போன்ற நிறைய பந்துவீச்சாளர்கள் இருந்ததால், பிராண்டன் குளோவருக்கு அணியில் இடம்பெற வாய்ப்புகள் குறைவாக இருக்கும் என்று நினைத்தார். ஆகவே அவர் நெதர்லாந்திற்கு சென்று குடியேறினார்.

Tags:    

மேலும் செய்திகள்