உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்று தொடரின் சிறந்த அணி - ஐசிசி வெளியீடு ..!
உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்று தொடரின் சிறந்த அணியை ஐசிசி அறிவித்துள்ளது.;
துபாய்,
இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்றன. உலக கோப்பை தொடரில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.
போட்டியை நடத்தும் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. மீதமுள்ள 2 அணிகளை தேர்வு செய்ய தகுதிசுற்று நடத்தப்பட்டது.
இந்த தொடரின் முடிவில் இலங்கை, நெதர்லாந்து அணிகள் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றன. முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், போட்டியை நடத்திய ஜிம்பாப்வே அணிகள் வெளியேறின. இந்நிலையில் உலகக்கோப்பை தகுதிச்சுற்று தொடரின் சிறந்த அணியை ஐசிசி அறிவித்துள்ளது.
அதன்படி அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இலங்கையின் பதும் நிசாங்கா, நெதர்லாந்தின் விக்ரம்ஜித் சிங் ஆகியோர் தேர்வாகி உள்ளனர். 3 முதல் 5 இடங்களில் முறையே ஸ்காட்லாந்தின் பிரண்டன் மெக்முல்லன், ஜிம்பாப்வேயின் சீன் வில்லியம்ஸ், நெதர்லாந்தின் பாஸ் டீ லீட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
6வது இடத்துக்கு ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசாவும், 7வது இடத்தில் நெதர்லாந்தின் ஸ்காட் எட்வர்ட்ஸ் ஆகியோரும் தேர்வாகி உள்ளனர். 8 முதல் 11 இடங்களுக்கு முறையே இலங்கையின் வனிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்சனா, ஸ்காட்லாந்தின் கிறிஸ் சோல், ஜிம்பாப்வேயின் ரிச்சர்ட் ங்கரவா ஆகியோரும் தேர்வாகி உள்ளனர்.
இந்த அணிக்கு நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ஸ் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் இலங்கை, ஜிம்பாப்வே, நெதர்லாந்தில் தலா 3 வீரர்களும், ஸ்காட்லாந்தில் இருந்து 2 வீரர்களும் தேர்வாகி உள்ளனர்.