டாம் ஹார்ட்லி அசத்தல் பந்துவீச்சு....மோசமான பேட்டிங்கால் தோல்வியை தழுவிய இந்தியா

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.

Update: 2024-01-28 12:11 GMT

image courtesy; AFP

ஐதராபாத்,

இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 246 ரன்கள் எடுத்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி ஜெய்ஸ்வால், ராகுல், ஜடேஜா ஆகியோரின் அரைசதத்துடன் 436 ரன்கள் எடுத்தது.

190 ரன்கள் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 316 ரன்கள் எடுத்து 126 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. போப் 148 ரன்களும், ரெகன் அகமது 16 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இந்நிலையில் 4ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.

இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி தனது 2வது இன்னிங்சில் 102.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 420 ரன்கள் எடுத்தது. இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போப், 196 ரன் எடுத்து கடைசி விக்கெட்டாக அவுட் ஆனார்.

இதையடுத்து 231 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியில் தொடக்க பேட்ஸ்மேன்களாக ரோகித் சர்மாவும், ஜெய்ஸ்வாலும் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 42 ரன்கள் எடுத்தது. ஜெய்ஸ்வால் 15 ரன்களுக்கு அவுட்டானார்.

இங்கிலாந்தின் சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ரோகித் சர்மா(39), கில்(0), கே.எல்.ராகுல்(22), அக்சர் படேல்(17), ஜடேஜா(2) மற்றும் ஐயர் ( 13) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை ஸ்ரீகர் பாரத் - அஸ்வின் ஜோடி சிறிது நேரம் காப்பாற்றியது. இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அரைசதம் அமைத்த நிலையில் ஸ்ரீகர் பாரத் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து அஸ்வினும் விரைவில் ஆட்டமிழந்தார். இதோடு இந்திய அணியின் நம்பிக்கையும் தகர்ந்தது.

முடிவில் இந்திய அணி 64.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இங்கிலாந்து தரப்பில் அறிமுக வீரர் டாம் ஹார்ட்லி 7 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்