எங்கள் அணியில் தற்போது இந்தியா பற்றி பேசுவதை தடை செய்துள்ளோம் - பாகிஸ்தான் வீரர்

வளர்ந்து வரும் வீரர்களுக்கான எமர்ஜிங் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஓமன் நாட்டில் நடைபெற உள்ளது.

Update: 2024-10-16 11:55 GMT

Image Courtesy: @icc

மஸ்கட்,

வளர்ந்து வரும் வீரர்களுக்கான எமர்ஜிங் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஓமன் நாட்டில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் 18ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட டாப் 8 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

ஓமன் நாட்டில் இம்முறை நடைபெற உள்ள எமர்ஜிங் ஆசிய கோப்பை டி20 தொடராக நடைபெற உள்ளது. அந்தத் தொடரில் விளையாடுவதற்காக திலக் வர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் அபிஷேக் சர்மா, திலக் வர்மா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் தங்களுடைய அணியில் இந்தியா எனும் வார்த்தையை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஏ அணியின் கேப்டன் முகமது ஹாரிஸ் கூறியுள்ளார். மேலும் கடந்த வருடத்தைப் போலவே இம்முறையும் இந்தியா உள்ளிட்ட அணிகளை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தக்க வைப்போம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது,

ஒரு விஷயத்தை உங்களிடம் நான் சொல்கிறேன். முதல் முறையாக எங்களுடைய அணியில் இந்தியாவைப் பற்றி பேசுவதற்கு நாங்கள் அனுமதி கொடுக்கவில்லை. ஏனெனில் நாங்கள் இந்தியாவை பற்றி மட்டும் சிந்திக்க விரும்பவில்லை. மற்ற அணிகளைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். நான் சீனியர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம் பெற்று கடந்த உலகக்கோப்பையிலும் விளையாடியுள்ளேன்.

எப்போதும் இந்தியா, இந்தியா என்று நினைக்கும் போது அது மனதளவில் தேவையற்ற அழுத்தத்தை உண்டாக்குகிறது. நாங்கள் மற்ற அணிகளையும் எதிர்கொள்ள வேண்டும். எங்களுடைய அணியில் தற்போது இந்தியா பற்றி பேசுவதை தடை செய்துள்ளோம். அதனால் இதுவரை இந்தியாவைப் பற்றி எங்கள் அணியில் நாங்கள் பேசவில்லை. இந்தியா போலவே அனைத்து அணிகளையும் நாங்கள் மதித்து வெற்றி பெற விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்