உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்ல வாய்ப்புள்ள அணிகள்.... யார் ? யாருக்கு வாய்ப்பு...!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அடுத்த ஆண்டு லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.

Update: 2022-12-20 11:24 GMT

Image Courtesy: AFP 

துபாய்,

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி பாகிஸ்தான் மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது. சொந்த மண்ணில் பாகிஸ்தான் தொடரை இழந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதிலும் டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் முழுமையாக பாகிஸ்தான் இழந்தது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்ததால் அந்த அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 7வது இடத்துக்கு சரிந்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை முழுமையாக கைப்பற்றிய இங்கிலாந்து அணி 5வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.

இதேபோல் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி ஒரு இடம் சரிந்து 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதன் மூலம் இந்திய அணி 2வது இடத்துக்கு முன்னேறியது.

உலக் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்:-

1.ஆஸ்திரேலியா (76.92%)

2. இந்தியா ( 55.77%)

3. தென் ஆப்பிரிக்கா ( 54.55%)

4. இலங்கை (53.33%)

5. இங்கிலாந்து (46.97%),

6.வெஸ்ட் இண்டீஸ் (40.91%)

7.பாகிஸ்தான் (38.89%)

8.நியூசிலாந்து (25.93%)

9.வங்காளதேசம் (12.12%) அணிகள் உள்ளன.

இந்நிலையில் இந்த அணிகளுக்கு இடையேயான அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களின் அடிப்படையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு செல்ல வாய்ப்புள்ள அணிகள் எவை என்று பார்ப்போம். புள்ளி பட்டியலில் வரிசையில் ஒவ்வொரு அணிக்கும் உள்ள வாய்ப்புகள் பற்றி இங்கு பார்ப்போம்.

1.ஆஸ்திரேலியா (76.92%):-

வர உள்ள தொடர்கள்: தென் ஆப்பிரிக்கா ( உள்நாட்டு தொடர் - 2 போட்டிகள்), இந்தியா ( வெளிநாட்டு தொடர் - 4 போட்டிகள்)

சாத்தியமான சிறந்த சதவீத முடிவு: 84.21%

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை அந்த அணி ஏறக்குறைய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் தனது முதல் இறுதிப்போட்டியில் பங்குபெற இடத்தை உறுதி செய்து விட்டதே எனக் கூறலாம். ஆஸ்திரேலிய அணி இனி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் 2 போட்டிகளிலும், இந்திய அணிக்கு எதிராக இந்திய மண்ணில் 4 போட்டிகளிலும் ஆட உள்ளது.

எதுவாகினாலும் ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி ஆட்டத்தில் ஆட தனது இடத்தை உறுதி செய்துவிட்டது என்றே கூறலாம்.

2. இந்தியா ( 55.77%):-

வர உள்ள தொடர்கள்: வங்காள்தேசம் (வெளிநாட்டு தொடர் -1 போட்டி), ஆஸ்திரேலியா (உள்நாட்டு தொடர் - 4 போட்டிகள்)

சாத்தியமான சிறந்த சதவீத முடிவு: 68.06%

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் இறுதிப்போட்டியில் பங்குபெற்ற இந்திய அணி 2வது இறுதிப்போட்டியில் பங்குபெற இனி வர உள்ள போட்டிகளில் சிறப்பாக செயல்படவேண்டும்.வங்காளதேசத்தில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இன்னும் அங்கு 1 டெஸ்ட் போட்டியில் ஆட உள்ளது. அந்த ஒரு போட்டியிலும் வெற்றி பெற்று தனது வெற்றி சதவீதத்தை அதிகரிக்க இந்திய அணி முயற்சிக்கும்.

மேலும் அடுத்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்லது. அந்த தொடரிலும் இந்திய அணி சிறப்பாக செயல்பட வேண்டும். இல்லையெனில் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி ஆட்டத்தில் கலந்து கொள்வதில் சிக்கல் ஏற்படலாம்.

மேலும், ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி இன்னும் 2 போட்டிகளில் ஆட உள்ளது. அந்த 2 போட்டிகளிலும் அந்த அணி தோல்வி அடைந்தால் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதில் சிக்கல் இருக்காது.

3. தென் ஆப்பிரிக்கா ( 54.55%)

வர உள்ள தொடர்கள்: ஆஸ்திரேலியா (வெளிநாட்டு தொடர் -2 போட்டிகள்), வெஸ்ட் இண்டீஸ் (உள்நாட்டு தொடர் - 2 போட்டிகள்)

சாத்தியமான சிறந்த சதவீத முடிவு: 69.77%

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கு முன்னர் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்க அணி அங்கு நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் 3வது இடத்துக்கு சரிந்துள்ளது.

தென் ஆப்ப்ரிக்க அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும் என்றால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட உள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் உள்ளது. இந்த தொடரில் தோல்வி அடைந்தால் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்படலாம்.

இந்த தொடருக்கு பின்னர் சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் ஆட உள்ளது. இந்த 4 போட்டிகளையும் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றால் எந்த வித சிக்கலும் இல்லாமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம். இல்லையெனில் இந்தியா-ஆஸ்திட்ரேலியா தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு சாதகமான முடிவுகள் வர வேண்டும்.

4. இலங்கை (53.33%):-

வர உள்ள தொடர்கள்: நியூசிலாந்து ( வெளிநாட்டு தொடர் - 2 போட்டிகள்)

சாத்தியமான சிறந்த சதவீத முடிவு: 61.11%

புள்ளிபட்டியலில் 4வது இடத்தில் உள்ள இலங்கை அணி அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிராக மட்டும் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆட உள்ளது. அந்த போட்டிகளும் நியூசிலாந்து மண்ணில் நடைபெற உள்ளது. இலங்கை அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும் என்றால் முதலில் நியூசிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளையும் வெல்ல வேண்டும்.

அதன் பின்னர் ஆஸ்திரேலிய அணி எஞ்சியுள்ள போட்டிகளில் வெற்றி பயணத்தை தொடர்ந்தால் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதில் இலங்கை அணிக்கு சாதகமாக இருக்கும். இவ்வாறு நடந்தால் இலங்கை அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

5. இங்கிலாந்து (46.97%):-

வர உள்ள தொடர்கள்: இல்லை

சாத்தியமான சிறந்த சதவீத முடிவு: 46.97%

இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிரான் டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றினாலும் அந்த அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேற இயலாமல் போனது. அந்த அணிக்கு இனி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர்கள் இல்லாததால் அந்த அணியின் அதிகபட்ச வெற்றி சதவீதம் 46.97 ஆகவே இருக்கும்.

ஆனால் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இறுடிப்போட்டிக்கு செல்ல வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால் இங்கிலாந்து அணியின் உலக டெஸ்ட் சாம்ம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியின் கனவு நனவாகமல் போனது.

6.வெஸ்ட் இண்டீஸ் (40.91%):-

வர உள்ள தொடர்கள்: தென் ஆப்பிரிகா ( வெளிநாட்டு தொடர் - 2 போட்டிகள்)

சாத்தியமான சிறந்த சதவீத முடிவு: 50%

வெஸ்ட் இண்டீஸ் அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் கனவும் நனவாகவில்லை. அந்த அணிக்கு இன்னும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே உள்ளது. அந்த 2 போட்டிகளிலும் அந்த அணி வெற்றி பெற்றாலும் அந்த அணியின் வெற்றி சதவீதம் அதிகபட்சம் 50 ஆகவே இருக்கும்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் அந்த அணி மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும் . இந்த தொடரில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றால் அந்த அணிக்கு இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பு அதிகரிக்கும்.

7.பாகிஸ்தான் (38.89%):-

வர உள்ள தொடர்கள்: நியூசிலாந்து ( உள்நாட்டு தொடர் - 2 போட்டிகள்)

சாத்தியமான சிறந்த சதவீத முடிவு: 47.62%

புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் இருக்கும் பாகிஸ்தானுக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு செல்லவாய்ப்பு இல்லை என நினைக்காதீர்கள். அந்த அணிக்கு இனி வர உள்ள நியூசிலாந்து தொடரில் வெற்றி பெற்று, மற்ற அணிகளின் முடிவு பாகிஸ்தானுக்கு சாதகமாக அமைந்தால் பாகிஸ்தான் அணி இறுதிபோட்டிக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.

அதாவது பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் நடைபெற உள்ள நியூசிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரை முதலில் கைப்பற்ற வேண்டும். அதன் பின்னர் சில சாதகமான முடிவுகள் வர வேண்டும். அவை,

* ஆஸ்திரேலிய அணி எஞ்சியுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 2 போட்டிகள் மற்றிம் இந்திய அணிக்கு எதிராக 4 போட்டிகள்.

* நாளை மறுநாள் தொடங்கும் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வங்காளதேச அணி இந்திய அணியை வீழ்த்த வேண்டும்.

* நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகளில் விளையாடும் இலங்கை அணி அந்த போட்டிகளில் தோற்க வேண்டும்.

* தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 போட்டிகளில் 1 ல் கட்டாயமாக வெற்றி பெற வேண்டும். மற்றொரு போட்டியில் டிரா காண வேண்டும்.

இவ்வாறு மற்ற அணிகளின் முடிவுகள் அமைந்தால் பாகிஸ்தான் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.

8.நியூசிலாந்து (25.93%):-

வர உள்ள தொடர்கள்: பாகிஸ்தான் ( வெளிநாட்டு தொடர் - 2 போட்டிகள்), இலங்கை ( உள்நாட்டு தொடர் - 2போட்டிகள்).

சாத்தியமான சிறந்த சதவீத முடிவு: 48.72%

முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் சாம்பியனான நியூசிலாந்து அணி இந்த முறை புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு இன்னும் 4 போட்டிகள் எஞ்சி இருந்தாலும் அந்த அணியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேற வாய்ப்பு இல்லை எனலாம்.

அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாததால் இந்த முறை புது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியாளர் கிடைப்பது உறுதியாகி உள்ளது.

9.வங்காளதேசம் (12.12%):-

வர உள்ள தொடர்கள்: இந்தியா (உள்நாட்டு தொடர் - 1 போட்டி)

சாத்தியமான சிறந்த சதவீத முடிவு: 19.44%

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் வங்காளதேச அணிக்கு இன்னும் ஒரே ஒரு போட்டி மட்டுமே உள்ளதால் அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற வாய்ப்பே இல்லை. இந்திய அணிக்கு எதிரான அந்த அபோட்டியில் வெற்றி பெற்று மற்ற அணிகளுக்கு வேண்டுமானால் உதவலாம். அதே வேளையில் இந்த போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தனது வெற்றி சதவீததை அதிகப்படுத்த முயற்சி செய்யும்.

தற்போதுள்ள நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் விளையாட 6 அணிகளுக்கு வாய்ப்பு உள்ளது. அந்த அணிகள் ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான். இந்த 6 அணிகளில் ஆஸ்திரேலியா கிட்டத்தட்ட தனது இறுதிப்போட்டி வாய்ப்பை உறுதி செய்து விட்டது எனலாம்.

எனவே, மீதமுள்ள ஒரு இடத்துக்கு 5 அணிகளுக்கு கடும் போட்டி நிலவுகிறது, இருந்தாலும் இந்தியா அல்லது தென் ஆப்பிரிக்கா இந்த இரு அணிகளில் ஒரு அணி இறுதிபோட்டிக்கு முன்னேற அதிக வாய்ப்பு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்