டி20 உலகக்கோப்பை : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்து சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது அயர்லாந்து

2 முறை சாம்பியன் பட்டம் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி டி20உலககோப்பையிலிருந்து வெளியேறியுள்ளது.

Update: 2022-10-21 07:26 GMT

ஹொபெர்ட்,

டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் குரூப் பி பிரிவில் இன்று வெஸ்ட் இண்டீஸ் - அயர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கைய்ல் மேயர் 1 ரன்னில் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரரான ஜான்சன் சார்லஸ் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மேலும் எவின் லிவிஸ் மற்றும் நிக்கோலஸ் பூரன் இருவரும் தலா 13 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். சிறப்பாக விளையாடிய பிராண்டன் கிங் இறுதி வரை அவுட்டாகாமல் 48 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து அணிக்கு பலம் சேர்த்தார். ஓடின் ஸ்மித்தும் அவுட்டாகாமல் 19 ரன்களுடன் களத்தில் இருந்தார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி பேட்டிங் செய்தது.

தொடக்க வீரரர்களாக பால் ஸ்டிர்லிங் ,ஆண்டி பால்பிர்னி ஆகியோர் களமிறங்கினார். தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த இருவரும் பந்துகளை சிக்ஸர்,பவுண்டருக்கு பறக்க விட்டனர்.இதனால் அயர்லாந்து அணியின் ரன் ரேட் அதிரடியாக உயர்ந்தது.6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 64 ரன்கள் எடுத்தது.

சிறப்பாக விளையாடிய ஆண்டி பால்பிர்னி 23 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.பின்னர் லோர்கன் டக்கர் களமிறங்கினார்.

மறுமுனையில் பால் ஸ்டிர்லிங் அதிரடி அரைசதம் அடித்தார். லோர்கன் டக்கரும் அவரது பங்கிற்கு பவுண்டரி ,சிக்ஸர் பறக்க விட்டார்.வெஸ்ட் இண்டீஸ் அணியால் 2வது விக்கெட் வீழ்த்த முடியவில்லை.

இறுதியில் 17.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்து அயர்லாந்து அணி அபார வெற்றி பெற்றது.பால் ஸ்டிர்லிங் 66 ரன்களுடன் ,லோர்கன் டக்கர் 45 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியால் அயர்லாந்து அணி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது. 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி டி20உலககோப்பையிலிருந்து வெளியேறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்