டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் பவுலிங் கூட்டணி இப்படி அமைய வேண்டும் - கவாஸ்கர் ஆலோசனை

டி20 உலகக்கோப்பை தொடரில் சிராஜ், பும்ரா ஆகியோருடன் ஹர்திக் பாண்ட்யா 3-வது வேகப்பந்து வீச்சாளராக செயல்பட வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-01 10:31 GMT

மும்பை,

ரசிகர்களை எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருக்கும் 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் இன்று ஆரம்பமாக உள்ளது. இதன் முதலாவது போட்டியில் அமெரிக்கா - கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த தொடரில் 17 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்லும் முனைப்புடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்கி உள்ளது.

பொதுவாக ஐசிசி தொடர் எங்கு நடைபெற்றாலும் அங்குள்ள கால சூழ்நிலைகளை அடிப்படையாக வைத்தே அனைத்து அணிகளும் தங்களுடைய கலவையை உருவாக்கும். அதாவது சூழ்நிலைகள் மற்றும் மைதானம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்து எத்தனை பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் விளையாடு வேண்டும் என்பதை அணி நிர்வாகங்கள் திட்டமிடுவது வழக்கமாகும்.

இந்நிலையில் இந்த உலகக்கோப்பையில் சிராஜ், பும்ரா ஆகியோருடன் ஹர்திக் பாண்ட்யா 3-வது வேகப்பந்து வீச்சாளராக செயல்பட வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெறும் போட்டிகளில் 3 ஸ்பின்னர்கள் விளையாட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:-

"வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் பவுலிங் அட்டாக் மிகவும் முக்கியமானது. எனவே இந்தியா 3 ஸ்பின்னர்கள் மற்றும் 2 வேகப்பந்து வீச்சாளர்களுடன் செல்ல வேண்டும். ஹர்திக் பாண்ட்யா 3-வது பேக்-அப் வேகப்பந்து வீச்சாளராக இருக்கலாம். இது இந்திய அணியின் சமநிலையை சமப்படுத்தும் என்று நினைக்கிறேன். நம்முடைய அணி அனுபவமும் மற்றும் இளமையும் கலந்த நல்ல அணியாக இருப்பதாகவும் நான் நம்புகிறேன். விராட் கோலி, ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோருடன் ஜெய்ஸ்வால், ஷிவம் துபே, ரிஷப் பண்ட் போன்ற இளம் வீரர்கள் இந்திய அணிக்கு வலு சேர்க்கின்றனர்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்