விராட், ஜெய்ஸ்வால் சதம்.. இந்தியா 2-வது இன்னிங்சில் 487 ரன்கள் குவித்து டிக்ளேர்

ஆஸ்திரேலியாவுக்கு முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற 534 ரன்களை இந்தியா இலக்காக நிர்ணயித்துள்ளது.

Update: 2024-11-24 09:31 GMT

பெர்த்,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதல் இன்னிங்சில் விளையாடிய இந்தியா 150 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 104 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இதனையடுத்து 46 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய இந்தியா 2-வது நாளில் விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் அடித்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ஜெய்ஸ்வால் 90 ரன்களுடனும், கேஎல் ராகுல் 62 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த கேஎல் ராகுல் - ஜெய்ஸ்வால் தொடக்க விக்கெட்டுக்கு 201 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் பிரிந்தனர். கேஎல் ராகுல் 77 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய படிக்கல் 25 ரன்களில் அவுட்டானார். இதனிடையே ஜெய்ஸ்வால் சதமடித்து அசத்தினார்.

இதனையடுத்து ஜோடி சேர்ந்த கோலி - ஜெய்ஸ்வால் இணை சிறப்பாக விளையாடி அணி வலுவான முன்னிலை பெற உதவினர். அபாரமாக விளையாடிய ஜெய்ஸ்வால் 161 ரன்களில் ஆட்டமிழந்தார். விராட் கோலி நிலைத்து விளையாட மறுமுனையில் ரிஷப் பண்ட், துருவ் ஜூரல் தலா 1 ரன்களில் ஆட்டமிழந்தனர். விராட் கோலியுடன் சிறிது நேரம் ஜோடி சேர்ந்த சுந்தர் தனது பங்குக்கு 29 ரன்கள் அடித்த நிலையில் போல்டானார்.

பின்னர் கை கோர்த்த நிதிஷ் ரெட்டி - விராட் கோலி அதிரடியான ரன் குவிப்பில் ஈடுபட்டனர். மீண்டும் பார்முக்கு திரும்பிய விராட் கோலி ஒரு வருடத்திற்கு பிறகு டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்தினார். சதம் அடித்த உடனேயே இந்தியா டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 487 ரன்கள் அடித்திருந்தபோது டிக்ளேர் செய்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 534 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி 100 ரன்களுடனும், நிதிஷ் ரெட்டி 38 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

வெற்றி இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா களமிறங்கி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்