கான்ஸ்டாஸ் சர்ச்சை: விராட் கோலிக்கு கெவின் பீட்டர்சன் ஆதரவு
விராட் கோலி மைதானத்தில் சுவாரசியத்தை ஏற்படுத்த கூடியவர் என்று கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
லண்டன்,
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் அடித்துள்ளது. இந்தியா இன்னும் 310 ரன்கள் பின்தங்கி உள்ள நிலையில் நாளை 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
முன்னதாக இந்த போட்டியின் முதல் நாளான நேற்று ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரராக களமிறங்கி சிறப்பாக விளையாடிய சாம் கான்ஸ்டாஸ் 60 ரன்கள் அடித்து வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தார்.
அவர் பேட்டிங் செய்தபோது 10வது ஓவரின் முடிவில் பந்தை கையில் எடுத்துக்கொண்டு ஓவர் மாற்றுவதற்காக விராட் கோலி நடந்து சென்றார். அதே பாதையில் எதிர்புறம் கான்ஸ்டாஸ் நடந்து வந்தார். அப்போது இருவரும் தங்களுடைய தோளில் நேருக்கு நேராக கொஞ்சம் பலமாக இடித்துக் கொண்டார்கள். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் எழுந்தது. உடனடியாக அருகில் இருந்த உஸ்மான் கவாஜா மற்றும் நடுவர்கள் உள்ளே புகுந்து நிறுத்தினார்கள்.
இருப்பினும் அந்த இடத்தில் விராட் கோலி வேண்டுமென்றே அவர் மீது மோதியதாக அறிவித்துள்ள ஐ.சி.சி. அவருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் அபராதமும், ஒரு கருப்பு புள்ளி வழங்கியும் தண்டனை விதித்தது.
மேலும் அறிமுக வீரரிடம் விராட் கோலி இப்படி நடந்து கொண்டது குறித்து பல முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். மேலும் ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று விராட் கோலியை கோமாளி என சித்தரித்து செய்தி வெளியிட்டது.
இந்நிலையில் தியேட்டரில் கிடைக்கும் பொழுதுபோக்கை போல மைதானத்தில் விராட் கோலி சுவாரசியத்தை ஏற்படுத்தக் கூடியவர் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் ஆதரவு தெரிவித்துள்ளார். ஒருவேளை விராட் கோலி இல்லையெனில் போட்டி அலுப்புத் தட்டுவதாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் இங்கே விளையாடும் பல வீரர்கள் விராட் கோலியின் கெரியரில் நான்கில் ஒரு பங்கை கூட தொட முடியாது என்றும் பீட்டர்சன் பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு:- "ஆஸ்திரேலியாவில் விராட் கோலி தியேட்டரை உருவாக்கி வருகிறார்! வாங்க போகலாம்! அந்த நிகழ்ச்சியை நடத்துபவர் இல்லையெனில் அது எவ்வளவு அலுப்பு தட்டும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். தனது கெரியரில் அடித்துள்ள ஒவ்வொரு ரன்களுக்கும் விராட் கோலி தகுதியானவர். இங்கே பலர் தங்கள் வெற்றிகரமான சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் விராட் சாதித்ததில் நான்கில் ஒரு பங்கை மட்டுமே சாதிப்பார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.