தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: 2-வது இன்னிங்சில் பாகிஸ்தான் தடுமாற்றம்
பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் 211 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
செஞ்சூரியன்,
தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 57.3 ஓவர்களில் 211 ரன்னில் அடங்கியது. அதிகபட்சமாக கம்ரான் குலாம் 54 ரன்கள் அடித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் டேன் பேட்டர்சன் 5 விக்கெட்டுகளும், கார்பின் பாஷ் 4 விக்கெட்டும் அள்ளினர்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 22 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 82 ரன்கள் அடித்திருந்தது. மார்க்ரம் 47 ரன்களுடனும், கேப்டன் பவுமா 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி சிறப்பாக பேட்டிங் செய்தது. பவுமா தனது பங்குக்கு 31 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய பெடிங்காம் 33 பந்துகளில் 30 ரன்கள் அடித்தால் நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் மார்க்ரம் நிலைத்து விளையாடினார்.
பின்னர் களமிறங்கிய கைல் வெர்ரைன் மற்றும் மார்கோ ஜான்சன் தலா 2 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தனர். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மார்க்ரம் 89 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதி கட்டத்தில் களமிறங்கிய கார்பின் பாஷ் அதிரடியாக விளையாட தென் ஆப்பிரிக்கா 300 ரன்களை கடந்தது. முடிவில் 73.4 ஓவர்கள் விளையாடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 301 ரன்களில் ஆல் அவுட் ஆனது. கார்பின் பாஷ் 81 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் இருந்தார். பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக குர்ராம் ஷாஜாத் மற்றும் நசீம் ஷா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் 90 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஒரளவு நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் 49 ரன்கள் அமைத்த நிலையில் சைம் அயுப் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன ஷான் மசூத் 28 ரன்களில் அவுட்டானார்.
2-வது நாள் முடிவில் பாகிஸ்தான் 88 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. பாபர் அசாம் 16 ரன்களுடனும், சாத் ஷகீல் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் மார்கோ ஜான்சன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். பாகிஸ்தான் இன்னும் 2 ரன்கள் பின்தங்கியுள்ளது.
போதிய வெளிச்சமின்மை காரணமாக 2-வது நாள் ஆட்டம் முன்கூட்டியே முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நாளை 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.