பெர்த் டெஸ்ட்; இவர்கள் இருவரும் எனக்கு தொடர்ந்து ஆலோசனைகளை வழங்கினர் - ஹர்ஷித் ராணா
பெர்த் டெஸ்டில் இந்தியாவின் அறிமுக வீரராக ஹர்ஷித் ராணா களம் இறங்கினார்.
பெர்த்,
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை (2024-25) தொடரின் முதல் போட்டி பெர்த் மைதானத்தில் மைதானத்தில் நடைபெற்று வருகிரது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 150 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 41 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஜோஷ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 104 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக ஸ்டார்க் 26 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அபாரமாக பந்துவீசிய பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 46 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நேற்றைய 2வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் 90 ரன்களும் , கேஎல் ராகுல் 62 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இன்று 3ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் இந்தியாவின் அறிமுக வீரராக ஹர்ஷித் ராணா களம் இறங்கினார்.
இவர் ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்நிலையில், பெர்த் டெஸ்டில் விராட் மற்றும் பும்ரா இருவரும் தனக்கு தொடர்ந்து நிறைய ஆலோசனைகளை வழங்கியதாக ஹர்ஷித் ராணா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
பும்ரா நான் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தொடர்ந்து ஆலோசனைகள் கொடுத்தார். விராட்டும் ஆலோசனை கொடுத்தார். அது எனக்கு நிறைய உதவியது. அவர்களைப் போன்றவர்கள் எனக்கு பந்தை எங்கே வீச வேண்டும், வீசக்கூடாது போன்ற உள்ளீடுகளை வழங்கினார்கள். அது எனக்கு நிறைய தன்னம்பிக்கையை கொடுத்தது. இந்திய அணிக்காக அறிமுகமாகும் நாளுக்கு முன் என்னால் சரியாக தூங்க முடியவில்லை.
ஆனால் காலையில் எந்த படபடப்புகளும் இருந்தன என்று நான் சொல்ல மாட்டேன். எனக்கான அறிமுக தொப்பியை பெறும் போது படபடப்பு இருந்தது. அதை பெறும் போது நான் அழுது விட்டேன். ஒரு குழந்தையாக இருக்கும் போது நான் எனது தந்தையுடன் அதிகாலையிலேயே எழுந்து ஆஸ்திரேலியாவில் விளையாடும் போட்டிகளை பார்ப்பேன். இன்று அங்கே நான் இந்தியாவுக்காக விளையாடுவது மிகப்பெரிய விஷயம். இவ்வாறு அவர் கூறினார்.