டி20 உலகக்கோப்பை: 'சூப்பர் 8' சுற்றில் ஆப்கானிஸ்தானுடன் இந்தியா இன்று மோதல்

சூப்பர் 8 சுற்று நடக்கும் வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்கள் பேட்டிங்குக்கு ஓரளவு கைகொடுக்கக்கூடியவை.

Update: 2024-06-20 01:12 GMT

பிரிஜ்டவுன்,

9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் 8 அணிகள் சூப்பர்8 சுற்றுக்கு முன்னேறின. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி குரூப்1-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், குரூப்2-ல் வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ளும் இந்தியா

இந்த நிலையில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி  சூப்பர்8 சுற்றில் தனது முதலாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை இன்று (வியாழக்கிழமை) பிரிட்ஜ்டவுனில் எதிர்கொள்கிறது.

இந்திய அணி லீக் சுற்றில் பாகிஸ்தான், அமெரிக்கா, அயர்லாந்து ஆகிய அணிகளை வீழ்த்தி 'ஏ' பிரிவில் முதலிடம் பிடித்தது. கனடாவுக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இந்தியா தனது லீக் ஆட்டங்கள் அனைத்தையும் பேட்டிங்குக்கு மிக கடினமான அமெரிக்காவின் நியூயார்க் ஆடுகளத்தில் விளையாடியது. 119 ரன்கள் எடுத்ததே இந்தியாவின் அதிகபட்சமாக அமைந்தது.

ஆனால் சூப்பர்8 சுற்று நடக்கும் வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்கள் பேட்டிங்குக்கு ஓரளவு கைகொடுக்கக்கூடியவை. சுழற்பந்து வீச்சாளர்களாலும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். பிரிட்ஜ்டவுன் ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியா லீக்கில் 201 ரன்கள் குவித்து கவனத்தை ஈர்த்தது. அதனால் இனி இந்திய பேட்ஸ்மேன்களிடம் இருந்து ரன்மழையை எதிர்பார்க்கலாம். முதல் 3 ஆட்டங்களில் 1, 4, 0 வீதம் எடுத்து சொதப்பிய விராட் கோலி ரன் குவிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார். விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் (96 ரன்) பார்மில் உள்ளார். இதே போல் கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் நிலைத்து நின்று ஆட வேண்டியது அவசியமாகும்.

பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா (5 விக்கெட்), ஹர்திக் பாண்ட்யா (7 விக்கெட்), அர்ஷ்தீப்சிங் (7 விக்கெட்) மிரட்டுகிறார்கள். ஆனால் இங்குள்ள ஆடுகளத்துக்கு ஏற்ப கூடுதலாக ஒரு சுழற்பந்து வீச்சாளரை சேர்க்க இந்திய அணி நிர்வாகம் திட்டமிட்டால் தொடர்ந்து தடுமாற்றத்தை சந்தித்து வரும் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் வெளியே உட்கார வைக்கப்படலாம். மற்றபடி இந்திய அணியில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை.

லீக்கில் சி பிரிவில் அங்கம் வகித்த ஆப்கானிஸ்தான் அணி, நியூசிலாந்துக்கு 84 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி அளித்தது. உகாண்டா, பப்புவா நியூ கினி ஆகிய அணிகளையும் தோற்கடித்து அடுத்த சுற்றை எட்டியுள்ளது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இறுதி லீக்கில் தோல்வியை தழுவியது.

அந்த அணியில் பேட்டிங்கில் ரமனுல்லா குர்பாஸ் (4 ஆட்டத்தில் 167 ரன்), இப்ராகிம் ஜட்ரன் (152 ரன்), குல்படின் நைப், பந்து வீச்சில் பசல்ஹக் பரூக்கி (12 விக்கெட்), கேப்டன் ரஷித்கான் (6 விக்கெட்) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ஆப்கானிஸ்தான் வீரர்கள் எப்போதும் கடும் சவால் அளிக்கக்கூடியவர்கள். அதனால் இந்திய அணியினர் மிகவும் எச்சரிக்கையுடன் விளையாடுவார்கள். இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் போது, அதன் பிறகு அரைஇறுதியை எட்டுவதற்கான நெருக்கடி வெகுவாக குறையும் என்பதால் இரு அணியினரும் களத்தில் வரிந்து கட்டி நிற்பார்கள்.

20 ஓவர் போட்டியில் இவ்விரு அணிகள் 8 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 7-ல் இந்தியா வெற்றி கண்டது. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல், அர்ஷ்தீப்சிங், பும்ரா, முகமது சிராஜ் அல்லது குல்தீப் யாதவ்.

ஆப்கானிஸ்தான்: ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன், குல்படின் நைப், அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், நஜிபுல்லா ஜட்ரன், முகமது நபி, கரிம் ஜனத், ரஷித் கான் (கேப்டன்), நூர் அகமது, நவீன் உல்-ஹக், பசல்ஹக் பரூக்கி.

இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

இதே நாளில் ஆஸ்திரேலியா- வங்காளதேசம் இடையிலான ஆட்டம் ஆன்டிகுவாவில் உள்ளூர் நேரப்படி இரவில் தொடங்கினாலும் இந்திய நேரப்படி மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு தான் தெரியும். 20 ஓவர் போட்டியில் இவ்விரு அணிகள் இதற்கு முன்பு 10 முறை மோதியுள்ளன. இதில் 6-ல் ஆஸ்திரேலியாவும், 4-ல் வங்காளதேசமும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags:    

மேலும் செய்திகள்