இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது மிகப்பெரிய சவாலாகும் - வங்காளதேச பயிற்சியாளர்
இந்தியா - வங்காளதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நாளை தொடங்குகிறது.;
சென்னை,
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடரில் முதலில் டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை சென்னையில் தொடங்குகிறது.
இதையடுத்து இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரையொட்டி வங்காளதேச அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திகா ஹதுருசிங்கே நேற்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது, இந்திய தொடரை எதிர்கொள்வதற்கு எங்களுக்கு அதிக நம்பிக்கையை தந்துள்ளது. இதனால் எங்கள் மீது உருவாகியுள்ள எதிர்பார்ப்பு கூடுதல் நெருக்கடியாக இருக்கும். ஆனால் நெருக்கடியை கவுரவமாக கருதுகிறோம். இது எங்களுக்கு சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை கொடுக்கும்.
அதே சமயம் நாங்கள் எந்த நிலையில் இருக்கிறோம். பலம், பலவீனம், எங்களது எல்லை எது என்பதை புரிந்து வைத்துள்ளோம். ஆனால் உண்மையிலேயே உலகின் சிறந்த அணிகளுக்கு எதிராக விளையாடுவதன் மூலம் ஊக்கமடைகிறோம். இந்தியா போன்ற அணிகளுக்கு எதிராக இந்தியாவில் விளையாடுவது மிகப்பெரிய சவாலாகும்.
சிறந்த அணிகளுக்கு எதிராக ஆடும் போது உங்களது அணி எந்த நிலையில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள வாய்ப்பாக அமையும். சுழற்பந்து வீச்சாளர்கள் ஷகிப் மற்றும் மெஹதி ஹசன் மிராஸ் இருவரும் பேட்டிங்கிலும் பலம் சேர்க்கக் கூடியவர்கள். சுழற்பந்து வீசுவதுடன் தரமான பேட்ஸ்மேன்களாகவும் அவர்கள் உள்ளனர்.
லிட்டான் தாஸ் மற்றும் முஸ்தாபிஜூர் ரஹ்மான் இருவரும் பிரதான பேட்ஸ்மேன்களாக உள்ளனர். எங்களிடம் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களும் இருக்கிறார்கள். இந்த தொடருக்கு எங்களது அணியின் கலவை மிகவும் நன்றாக இருக்கிறது. இந்த தொடரில் எங்களால் கடும் சவால் கொடுக்க முடியும். இந்திய துணை கண்டத்தில் ஆடுகளத்தை கணிப்பது எளிதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.