என்னுடைய அணுகுமுறை இனி எப்பொழுதும் இதுதான்... மாறவே மாறாது - ரோகித் திட்டவட்டம்

இலங்கைக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் ரோகித் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்துள்ளார்.

Update: 2024-08-05 05:41 GMT

கொழும்பு,

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி சமனில் முடிவடைந்த நிலையில், 2-வது போட்டியில் இலங்கை வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது.

முன்னதாக இந்த தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் தடுமாறி வரும் நிலையில், ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 2 போட்டிகளிலும் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். சமீப காலமாகவே அதிரடியாக விளையாடி வரும் அவர் சதம், அரைசதம் குறித்து கவலைப்படவில்லை. அணிக்கு தேவையான அதிரடியான தொடக்கத்தை மட்டுமே கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் 2-வது ஒருநாள் போட்டி முடிவடைந்த பின் தனது இந்த அதிரடியான அணுகுமுறை குறித்து பேசியிருந்த ரோகித் சர்மா கூறுகையில், "எனக்கு 50, 100 ரன்கள் அதைப்பற்றி எல்லாம் கவலை கிடையாது. அணியின் வெற்றிதான் முக்கியம். எனவேதான் நான் அதிரடியாக விளையாடி வருகிறேன். நான் இந்த போட்டியிலும் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து விட்டேன். அதற்கு காரணம் யாதெனில் என்னுடைய இந்த அதிரடியான பேட்டிங் வழிதான்.

இருந்தாலும் நான் இப்படித்தான் தொடர்ந்து பேட்டிங் செய்ய விரும்புகிறேன். இதுபோன்று விளையாடுவதில் நிறைய ரிஸ்க் இருக்கும். ஆனாலும் அதனை கடந்து நான் விளையாடித்தான் ஆக வேண்டும். அணிக்கு அது நல்லது என்பதனால் நான் நிச்சயம் இனியும் அதேபோன்று தான் ஆடுவேன். என்னுடைய இந்த அணுகுமுறை எப்பொழுதும் மாறாது" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்