இந்தியா அபார பந்துவீச்சு: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெஸ்ட் இண்டீஸ் திணறல்
வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து வருவதால், இந்திய அணியில் வெற்றிவாய்ப்பு தற்போதே பிரகாசமாகியுள்ளது.
டொமினிகா,
வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. முதலாவது டெஸ்ட் டொமினிகாவில் நடைபெற்று வருகிறது. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள், இந்திய பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திண்டாடினர்.
அந்த அணி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 64.3 ஓவர்களில் 150 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனை தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித்தும், ஜெய்வாலும் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருவரும் சதமடித்தனர்.
ரோகித் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிவந்த ஜெய்ஸ்வால் 171 ரன்கள் எடுத்து அவுட்டானார். கோலி 76 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 152.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 421 ரன்கள் எடுத்த நிலையில், டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. அத்துடன் இந்திய அணி 271 ரன்கள் முன்னிலை பெற்றது.
இதனை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி தனது இரண்டாவது இன்னிங்சில் விளையாடி வருகிறது. இந்திய பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சால் அந்த அணி தொடக்கத்திலேயே தடுமாறி வந்தநிலையில், விக்கெட்டுகளையும் அடுத்தடுத்து இழந்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கிரெய்க் பிராத்வைட் (7), சந்தர்பால்(7) ரேமன் ரைபர் (11), பிளாக்வுட் (5), ஜோசுவா டா சில்வா(13) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது வரை 35 ஓவர்கள் முடிவில் 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து 76 ரன்களை மட்டுமே எடுத்து திணறி வருகிறது. அத்துடன், 195 ரன்கள் பின்தங்கி உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ந்து முக்கிய விக்கெட்டுகளை இழந்து வருவதால், இந்திய அணியில் வெற்றிவாய்ப்பு தற்போதே பிரகாசமாகியுள்ளது.