ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

Update: 2022-08-27 19:52 GMT

 

ஆசிய கிரிக்கெட்

ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட்டில் துபாயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அரங்கேறும் 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் (ஏ பிரிவு) கோதாவில் குதிக்கின்றன.

பரம போட்டியாளரான இந்தியா-பாகிஸ்தான் மோதல் என்றாலே உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் குஷியாகி விடுவார்கள். வீரர்களும் உணர்வுபூர்வமாக, இனம்புரியாத பதற்றத்திற்குள்ளாகி விடுவார்கள்.

எல்லை தாண்டிய பயங்கரவாதம் காரணமாக பாகிஸ்தானுடன் நேரடி கிரிக்கெட் தொடரில் விளையாடுவதை இந்தியா நிறுத்தி 10 ஆண்டுக்கு மேலாகி விட்டது. ஐ.சி.சி. உலக கோப்பை மற்றும் ஆசிய கோப்பை போட்டிகளில் மட்டுமே தற்போது இவ்விரு அணிகளும் மோதுகின்றன. அதனால் முன்பை விட இப்போது எதிர்பார்ப்பு இன்னும் எகிறி விட்டது.

நடப்பு சாம்பியனான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் இறங்குகிறது. கடந்த ஆண்டு இதே மைதானத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை லீக் சுற்றில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் மோசமாக தோற்றதுடன் அடுத்த சுற்று வாய்ப்பையும் இழந்தது. அந்த தோல்விக்கு பழிதீர்க்க இதை விட அருமையான சந்தர்ப்பம் கிடைக்காது.

ரோகித்-கோலி

கேப்டன் ரோகித் சர்மா, துணை கேப்டன் லேகேஷ் ராகுல், முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோர் இந்திய அணியின் பேட்டிங் தூண்களாக உள்ளனர். முக்கியமான இந்த ஆட்டத்தில் இவர்கள் சாதுர்யமாக விளையாட வேண்டியது அவசியமாகும். ஒரு மாத ஓய்வுக்கு பிறகு புத்துணர்ச்சியுடன் களம் திரும்பும் கோலி ரன்மழை பொழிவாரா என்று ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள். இதே போல் மிடில் வரிசையில் ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ் கைகொடுத்தால் வலுவான ஸ்கோரை எட்டலாம். தினேஷ் கார்த்திக்குக்கு இடம் கிடைப்பது சந்தேகம் தான். ஒரு வேளை அவர் வாய்ப்பு பெற்றால், ரவீந்திர ஜடேஜா வெளியே உட்கார வேண்டி வரும்.

பந்து வீச்சில் காயத்தால் ஜஸ்பிரித் பும்ரா விலகிய நிலையில் புவனேஷ்வர்குமார், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹலைத் தான் இந்திய அணி அதிகமாக நம்பி இருக்கிறது.

பாகிஸ்தான் எப்படி?

பாகிஸ்தான் அணியை எடுத்துக் கொண்டால் அந்த அணிக்கு கேப்டன் பாபர் அசாமும், துணை கேப்டன் முகமது ரிஸ்வானும் முதுகெலும்பாக உள்ளனர். அவசரம்காட்டாமல் அசால்ட்டாக பேட்டிங் செய்யக்கூடிய பாபர் அசாம் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து ரன்குவிக்கும் எந்திரமாக திகழ்ந்து வருகிறார். கடைசியாக ஆடிய 12 சர்வதேச போட்டிகளில் ஒன்றை தவிர மற்ற அனைத்திலும் குறைந்தது அரைசதம் அடித்துள்ளார். எனவே இந்த கூட்டணியை சீக்கிரம் உடைப்பது தான் இந்திய பவுலர்களுக்கு பெரும் சவாலாக இருக்கும்.

அபாயகரமான பவுலர்களில் ஒருவரான ஷகீன் ஷா அப்ரிடி கால்முட்டி காயத்தால் ஒதுங்கி இருப்பது அந்த அணிக்கு நிச்சயம் பின்னடைவு தான். கடந்த ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையில் அவர் தான் இந்தியாவின் டாப்-3 வீரர்களை வரிசையாக வீழ்த்தி ரன்வேகத்துக்கு முட்டுக்கட்டை போட்டார். அத்துடன் வளரும் வேகப்பந்து வீச்சாளர் முகமது வாசிமும் முதுகுவலியால் விலகி இருக்கிறார். ஆனாலும் நசீம் ஷா, முகமது நவாஸ், ஷதப் கான், ஹாரிஸ் ரவுப் என்று தரமான பவுலர்களுக்கு குறைவில்லை.

இரவு 7.30 மணிக்கு...

மொத்தத்தில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி சொன்னது போல, உச்சக்கட்ட அழுத்தம் நிறைந்த இந்த போட்டியில் அதை எந்த அணி திறம்பட கையாள்கிறதோ அந்த அணிக்கே முடிவு சாதகமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா அல்லது தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர்குமார், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், அவேஷ்கான்.

பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான், பாபர் அசாம் (கேப்டன்), பஹர் ஜமான், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, ஆசிப் அலி, ஹசன் அலி, ஷதப் கான், முகமது நவாஸ், ஹாரிஸ் ரவுப், நசீம் ஷா.

இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

இதுவரை....

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இதுவரை 14 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 8-ல் இந்தியாவும், 5-ல் பாகிஸ்தானும் வெற்றி பெற்றன. மழையால் ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் சந்திப்பது இது 9-வது நிகழ்வாகும். இதில் 6-ல் இந்தியாவும், 2-ல் பாகிஸ்தானும் வெற்றி பெற்றன. மற்றொரு ஆட்டம் சமனில் முடிந்தது. அதிலும் 'பவுல்-அவுட்' முறையில் இந்தியா வெற்றி கண்டது.

இந்திய அணியின் தொடக்க ஜோடி யார்?

ரோகித் சர்மா வித்தியாசமான பதில்

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பாகிஸ்தான் செய்தியாளர் ஒருவர், 'கடந்த சில தொடர்களில் இந்திய அணி பல தொடக்க ஜோடிகளை சோதனை முயற்சியாக களம் இறக்கியது. ரிஷப் பண்ட் தொடக்க வீரராக வந்தார். அந்த வரிசையில் சூர்யகுமார் யாதவ் ஆடினார். இப்போது காயத்தில் இருந்து மீண்ட லோகேஷ் ராகுல் வந்திருப்பதால் அவர் நேரடியாக தொடக்க வரிசைக்கு பயன்படுத்தப்படுவாரா?' என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த ரோகித் சர்மா, 'நாளைய ஆட்டத்தில் (அதாவது இன்று)) டாஸ் போட்ட பிறகு இந்திய அணியின் தொடக்க ஜோடி யார் என்பதை நீங்கள் பார்க்கலாம். அதுவரை இது ரகசியமாக இருக்கட்டும். கடந்த சில தொடர்களில் நாங்கள் சில புதிய விஷயங்களை செய்து பார்த்தோம். அவற்றில் சிலவற்றுக்கு பலன் கிடைத்தது. சில கைகூடவில்லை. ஆனாலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் புதிய முயற்சிகளை செய்து பார்ப்போம். அணிச் சேர்ச்கையை பொறுத்தமட்டில் யார்-யார் இடம் பெறுவார்கள் என்பது நாளை தான் (இன்று) உங்களுக்கு தெரிய வரும் ' என்றார்.

கோலிக்கு 100-வது ஆட்டம்

இந்த ஆட்டத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களின் பார்வையும் இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலி மீது திரும்பியிருக்கிறது என்றால் அது மிகையல்ல. கடந்த 2 ஆண்டுகளாக பெரிய அளவில் ரன் அடிக்காத 33 வயதான கோலி, இந்த போட்டியில் பேட்டிங்கில் சுழன்றடித்து பரவசப்படுத்துவாரா? என்று ரசிகர்கள் பேராவல் கொண்டுள்ளனர்.

விராட் கோலிக்கு இது 100-வது சர்வதேச 20 ஓவர் போட்டியாகும். இதன் மூலம் மூன்று வடிவிலான போட்டிகளிலும் குறைந்தது 100 ஆட்டங்களுக்கு மேல் கால்பதித்த முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை பெறப்போகிறார்.

20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 99 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 30 அரைசதம் உள்பட 3,308 ரன்கள் சேர்த்துள்ளார். அத்துடன் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் திரட்டிய இந்தியரும் கோலி தான். அந்த அணிக்கு எதிராக 7 ஆட்டங்களில் 3 அரைசதம் உள்பட 311 ரன்கள் எடுத்துள்ளார். அந்த ஆதிக்கத்தை மறுபடியும் தொடர்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

'மனஅழுத்தத்தால் ஒரு மாதம் பேட்டை தொடவில்லை' - கோலி

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, வெஸ்ட்இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே தொடரில் விளையாடாமல் ஓய்வு எடுத்தார். ஒரு மாதத்திற்கு பிறகு அவர் ஆசிய கோப்பை போட்டியின் மூலம் மீண்டும் களம் திரும்புகிறார். இந்த நிலையில் தான் மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்ததாக விராட் கோலி டி.வி. சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'நான் மன அழுத்தத்தில் இருந்தேன் என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதில் தயக்கமில்லை. 10 ஆண்டுகளில் முதல்முறையாக ஒரு மாதமாக எனது பேட்டை தொடவில்லை. சமீபத்திய ஆட்டங்களில் களத்தில் நான் வெளிப்படுத்தும் ஆக்ரோஷத்தில் கொஞ்சம் போலித்தனம் இருப்பதை உணர்ந்தேன். நீ தீவிரமாகத்தான் விளையாடுகிறாய் என்று எனக்கு நானே சமாதானப்படுத்த முயற்சித்தேன். ஆனால் எனது உடல், 'நீ செயல்படுவதை நிறுத்து' என்று சொல்லியது. 'இந்த சூழலில் இருந்து விடுபட ஓய்வு எடு' என்று மனசு சொன்னது. இது இயல்பான உணர்வு தான். ஆனால் தயக்கம் இருப்பதால் அதை பற்றி நாம் பேசுவதில்லை. மனதளவில் பலவீனமாக இருக்கிறோம் என்பதை காட்டிக்கொள்ள விரும்பமாட்டோம். வலுமிக்கவராக இருப்பது போல் நடிப்பது, பலவீனமாக இருக்கிறோம் என்பதை ஒப்புக்கொள்வதை விட மோசமானது. மனதளவில் நான் பலமிக்கவராக பார்க்கப்படுகிறேன். அது சரி தான். ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு. அந்த எல்லையை உணராவிட்டால் பாதிப்பு நமக்கு தான். இந்த காலக்கட்டம் எனக்கு நிறைய விஷயங்களை கற்றுத்தந்தது' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்