பெண்கள் டி 20 உலகக் கோப்பை: இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி

டக்வொர்த் லீவிஸ் முறையில் இந்திய அணி அயர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றது.;

Update:2023-02-20 22:26 IST

கெபேஹா,

10 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் கெபேஹா நகரில் நேற்று நடந்த 'பி' பிரிவு லீக் ஆட்டத்தில் இந்திய அணி, அயர்லாந்தை எதிர்கொண்டது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ராதா யாதவுக்கு பதிலாக தேவிகா வைத்யா சேர்க்கப்பட்டார்.

'டாஸ்' ஜெயித்த இந்தியா கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. இதன்படி ஸ்மிர்தி மந்தனாவும், ஷபாலி வர்மாவும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். வலுவான தொடக்கம் தந்தாலும் பெரிய அளவில் அதிரடி காட்ட முடியாமல் தவித்தனர். ஸ்கோர் 62-ஆக (9.3 ஓவர்) உயர்ந்த போது ஷபாலி 24 ரன்களில் (29 பந்து, 3 பவுண்டரி) கேட்ச் ஆனார். அடுத்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் வந்தார்.

மறுமுனையில் துணை கேப்டன் ஸ்மிர்தி மந்தனா, வேகப்பந்து வீச்சில் தடுமாறினார். 3 முறை கேட்ச் கண்டத்தில் இருந்தும் தப்பிபிழைத்தார். 47 ரன்னுக்கு பிறகே மந்தனாவின் பேட்டிங்கில் சூடு பிடித்தது. முர்ரே, டெலானி பந்து வீச்சில் சிக்சர்களை பறக்க விட்டு அசத்திய அவர் மேலும் சில பவுண்டரிகளையும் ஓட விட்டார். இதற்கிடையே ஹர்மன்பிரீத் கவுர் (13 ரன்), அடுத்து இறங்கிய விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் (0) ஒரே ஓவரில் காலியானார்கள்.

மந்தனா 87 ரன்

சதத்தை நோக்கி முன்னேறிய மந்தனா 19-வது ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 87 ரன்களில் (56 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார். 20 ஓவர் கிரிக்கெட்டில் அவரது சிறந்த ஸ்கோர் இதுவாகும். மந்தனாவின் வெளியேற்றத்திற்கு பிறகு நுழைந்த தீப்தி ஷர்மா டக்-அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். கடைசி ஓவரில் இரு பவுண்டரிகளை விரட்டி 150-ஐ கடக்க வைத்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 19 ரன்னில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். 20 ஓவர் முடிவில் இந்தியா 6 விக்கெட்டுக்கு 155 ரன்கள் சேர்த்தது. நடப்பு தொடரில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

பின்னர் 156 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய அயர்லாந்து அணியில் எமி ஹன்டர்(1 ரன்) ரன்-அவுட் ஆனார். பிரேன்டர்ஹாஸ்ட் (0) ரேணுகா சிங்கின் பந்து வீச்சில் வீழ்ந்தார்.

இதன் பின்னர் கபி லீவிஸ், கேப்டன் லாரா டெலானி கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். 8.2 ஓவர்களில் அந்த அணி 2 விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்திருந்த போது பலத்த காற்றுடன் மழை குறுக்கிட்டது. அப்போது லீவிஸ் 32 ரன்னுடனும், டெலானி 17 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்தியா வெற்றி

தொடர்ந்து மழை பெய்ததால் மேற்கொண்டு ஆட்டத்தை தொடர முடியவில்லை. இதையடுத்து டக்வொர்த் லீவிஸ் விதிமுறை கடைபிடிக்கப்பட்டது. 8.2 ஓவர்களில் அயர்லாந்தின் வெற்றிக்கு 59 ரன்கள் தேவையாக இருந்தது. ஆனால் 54 ரன் மட்டுமே எடுத்திருந்ததால் இந்தியா 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

4-வது லீக்கில் ஆடி 3-வது வெற்றியை சுவைத்த இந்திய அணி 6 புள்ளியுடன் அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. 20 ஓவர் உலகக் கோப்பையில் இந்திய அணி அரைஇறுதியை எட்டுவது இது 5-வது முறையாகும். அதே சமயம் அயர்லாந்து 4-வது தோல்வியுடன் நடையை கட்டியது.

இந்திய அணி அனேகமாக அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை சந்திக்க வேண்டி வரலாம்.

இன்று நடக்கும் கடைசி கட்ட லீக் ஆட்டங்களில் பாகிஸ்தான்- இங்கிலாந்து (மாலை 6.30 மணி), தென்ஆப்பிரிக்கா- வங்காளதேசம் (இரவு 10.30 மணி) அணிகள் மோதுகின்றன.

ஹர்மன்பிரீத் கவுர் இரட்டை சாதனை

இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு இது 150-வது ஆட்டமாகும். இதன் மூலம் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் 150 ஆட்டங்களில் விளையாடிய முதல் நபர் என்ற பெருமையை பெற்றார். ஆண்கள் கிரிக்கெட்டில் கூட யாரும் இந்த மைல்கல்லை எட்டியது கிடையாது.

அத்துடன் ஹர்மன்பிரீத் கவுர் நேற்று 3 ஆயிரம் ரன்களையும் (3,006 ரன்) கடந்தார். நியூசிலாந்தின் சுசி பேட்ஸ் (3,820 ரன், 143 ஆட்டம்), ஆஸ்திரேலியாவின் மெக் லானிங் (3,346 ரன்), வெஸ்ட் இண்டீசின் ஸ்டெபானி டெய்லர் (3,166 ரன்) ஆகியோருக்கு அடுத்து 20 ஓவர் கிரிக்கெட்டில் 3 ஆயிரம் ரன்களை கடந்த 4-வது வீராங்கனையாக சாதனை பட்டியலில் ஹர்மன்பிரீத் இணைந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்