தோனியின் வாழ்க்கையை ஒருநாள் வாழ விரும்புகிறேன் - நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்
எம்.எஸ்.தோனி இந்தியாவுக்காக 3 விதமான ஐ.சி.சி கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன் என்ற பெருமைக்கு உரியவர்.;
மும்பை,
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி (வயது 35). இவர் நியூசிலாந்து அணிக்காக 100 டெஸ்ட், 161 ஒருநாள் மற்றும் 125 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். இவர் இந்தியாவில் நடைபெற்ற CEAT கிரிக்கெட் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார்.
அப்போது அவரிடம் வேறொரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையை நீங்கள் ஒருநாள் வாழ விரும்பினால், அது யாருடைய வாழ்க்கையாக இருக்கும்? எதனால் வாழ நினைக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு பதில் அளித்து பேசிய டிம் சவுதி கூறியதாவது,
எம்.எஸ் தோனி தான். உலகில் மிகவும் விரும்பப்படும் கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான எம்.எஸ். தோனியின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை அறிய ஆர்வமாக உள்ளது என கூறினார். இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான எம்.எஸ்.தோனி இந்தியாவுக்காக 3 விதமான ஐ.சி.சி கோப்பைகளை வென்று கொடுத்த இந்திய கேப்டன் என்ற பெருமைக்கு உரியவர்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட எம்.எஸ்.தோனி தற்போது ஐ.பி.எல் தொடரில் மட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.