ஐ.பி.எல் தொடரில் மீண்டும் பயிற்சியாளராக செயல்பட விரும்புகிறேன் - ரிக்கி பாண்டிங்

ரிக்கி பாண்டிங்கை இங்கிலாந்தின் தலைமை பயிற்சியாளராக நியமிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

Update: 2024-08-09 19:36 GMT

image courtesy: PTI

மெல்போர்ன்,

ஐ.பி.எல். தொடரின் முன்னணி அணிகளில் ஒன்றாக விளங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் கடந்த சில வருடங்களாக பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். இருப்பினும் அவரது பயிற்சியின் கீழ் டெல்லி அணியால் ஒரு ஐ.பி.எல் கோப்பையை கூட வெல்ல முடியவில்லை.

இந்த நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் நிர்வாகம் அடுத்த ஐ.பி.எல் தொடருக்கு இந்திய பயிற்சியாளர் ஒருவரை தலைமை பயிற்சியாளராக நியமிக்க விரும்பியதை அடுத்து ரிக்கி பாண்டிங்கை தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கியது.

இந்நிலையில் இங்கிலாந்தின் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மேத்யூ மோட் அந்த பதவியில் இருந்து விலகியதை அடுத்து ரிக்கி பாண்டிங்கை இங்கிலாந்தின் தலைமை பயிற்சியாளராக நியமிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், சமீபத்தில் ரிக்கி பாண்டிங் அளித்த பேட்டியில் கூறியதாவது, சர்வதேச அணிக்காக பயிற்சியாளராக இருப்பது குறித்து இப்போது சிந்திக்க மாட்டேன். ஒரு சர்வதேச அணிக்கு பயிற்சியாளராக இருப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்படுவதால் எனது வாழ்க்கை இருக்கும் நிலையில் அதற்கான இடம் தற்போது இல்லை என்பதை நான் தெளிவு படுத்திக்கொள்கிறேன்.

ஐ.பி.எல்-லில் நான் அங்கம் வகித்த ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக இருந்தது. ஒரு வீரராகவும், மும்பை அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த போதும் நன்றாகவே அமைந்தது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியது குறித்து கேட்கிறீர்கள்.

நான் டெல்லி அணிக்கு கடந்த சில ஆண்டுகளாக பயிற்சியாளராக இருந்தேன். ஆனால் நினைத்த மாதிரி முடிவுகள் அமையவில்லை. நான் அங்கு சென்றது அணிக்கு கோப்பையை வெல்லத்தான். ஆனால் அது நடக்கவில்லை. இருப்பினும் ஐ.பி.எல். தொடரில் நான் மீண்டும் பயிற்சியாளராக செயல்பட விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்