சென்னை அணியின் மதிப்பு இத்தனை கோடியா..?
ஐபிஎல் தொடரின் வளர்ச்சி, அதில் விளையாடி வரும் அணிகளின் மதிப்பு உள்ளிட்டவை குறித்து ஒரு தனியார் நிறுவனம் ஆய்வு செய்துள்ளது.;
புதுடெல்லி,
அண்மையில் முடிவடைந்த 17-வது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. கடந்த சீசன்களை விட இந்த சீசனில் பேட்ஸ்மேன்களின் அதிரடி அதிகமாக இருந்தது. இதனால் இந்த சீசனில் ரன் மழை பொழிந்து ரசிகர்களை மகிழ்வித்தது.
இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் வளர்ச்சி, ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அணிகளின் மதிப்பு உள்ளிட்டவை குறித்து ஒரு தனியார் நிறுவனம் ஆய்வு செய்துள்ளது. அதன் முடிவில் நடப்பாண்டில் மட்டும் ஐபிஎல் தொடர் 6.5 சதவிகிதம் வளர்ச்சி பெற்றுள்ளதாகவும், ஐபிஎல் தொடரின் மதிப்பு ரூ.1.35 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் மட்டும் ரூ.28 ஆயிரம் கோடி வளர்ச்சியை ஐபிஎல் தொடர் எட்டியுள்ளது. இதற்கு ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு உரிமை டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி என்று பிரிந்ததும் முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது.
அதேபோல் ஐபிஎல் அணிகளின் மதிப்பு குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. அதில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மதிப்பு ரூ.1,930 கோடியாக கணக்கிடப்பட்டு முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் பெங்களூரு அணி உள்ளது. அதன் மதிப்பு ரூ.1,896 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. 3-வது இடத்தில் ரூ.1,805 கோடி மதிப்புடன் கொல்கத்தா உள்ளது. 4வது இடத்தில் உள்ள 5 முறை சாம்பியனான மும்பை அணியின் மதிப்பு ரூ.1,704 கோடியாக உள்ளது. தொடர்ந்து ராஜஸ்தான் அணியின் மதிப்பு ரூ.1,111 கோடியாகவும், ஐதராபாத் அணியின் மதிப்பு ரூ.1,103 கோடியாகவும் உள்ளது.