முதல் ஒருநாள் போட்டி: ஜிம்பாப்வேயை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

இந்திய அணி 30.5 ஓவர்களில் இலக்கை கடந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Update: 2022-08-18 13:19 GMT

ஹராரே,

இந்திய அணி ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களும், நடு வரிசை பேட்ஸ்மேன்களும் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.

அணியில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் ரெஜிஸ் சகப்வா 35 ரன்களும், 10 ஆம் நிலை வீரராக களமிறங்கிய ரிச்சர்டு என்கிராவா 34 ரன்களும் எடுத்தனர். இறுதியில் ஜிம்பாப்வே அணி 40.3 ஓவர்களில் 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.

இதையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவனும், சுப்மன் கில்லும் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் உயர்த்தினர்.

இவ்விரு பேட்ஸ்மேன்களையும் அவுட்டாக்க ஜிப்பாப்வே அணியினர் பல்வேறு யுக்திகளை பயன்படுத்தினர். ஆனால் அனைத்துமே இருவரிடமும் எடுபடவில்லை. ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்கள் எவ்வளவே முயன்றும் இருவரையும் அவுட்டாக்க முடியவில்லை.

இறுதிவரை ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் இந்திய அணி 30.5 ஓவர்களில் இலக்கை கடந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஷிகர் தவன் 81 ரன்களுடனும், சுப்மன் கில் 82 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்