உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து-வங்காளதேசம் இன்று மோதல் - மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான்-இலங்கை பலப்பரீட்சை

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் இங்கிலாந்து-வங்காளதேசம், பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதுகின்றன.

Update: 2023-10-10 00:22 GMT

image courtesy: Bangladesh Cricket twitter

தர்மசாலா,

இங்கிலாந்து-வங்காளதேசம்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. தர்மசாலாவில் காலை 10.30 மணிக்கு தொடங்கும் 7-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.

ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி தனது தொடக்க ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் 'சரண்' அடைந்தது. இங்கிலாந்து நிர்ணயித்த 283 ரன் இலக்கை 36.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு நியூசிலாந்து எளிதாக எட்டிப்பிடித்தது. அந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் ஜோ ரூட், கேப்டன் ஜோஸ் பட்லர், பேர்ஸ்டோ தவிர வேறு யாரும் சோபிக்கவில்லை. பந்து வீச்சும் மெச்சும்படி இல்லை.

ஆரம்ப ஆட்டத்தில் ஏற்பட்ட சரிவில் இருந்து மீண்டு முதலாவது வெற்றியை ருசிக்க இங்கிலாந்து அணி வியூகங்கள் வகுக்கும். காயம் காரணமாக முதல் ஆட்டத்தில் ஆடாத ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இன்னும் முழு உடல் தகுதியை எட்டாததால் இந்த ஆட்டத்திலும் விளையாட சாத்தியமில்லை என்று கேப்டன் பட்லர் தெரிவித்தார்.

ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்காளதேச அணி முதலாவது லீக்கில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை பதம் பார்த்தது. தர்மசாலாவில் நடந்த அந்த ஆட்டத்தில் 156 ரன்னில் ஆப்கானிஸ்தானை மடக்கிய வங்காளதேசம் 34.4 ஓவர்களில் வெற்றிக்கனியை பறித்தது. பேட்டிங்கில் நஜ்முன் ஹூசைன் ஷன்டோவும், ஆல்-ரவுண்டராக கேப்டன் ஷகிப் அல்-ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ்சும் அசத்தினர். பந்து வீச்சில் ஷோரிபுல் இஸ்லாம், தஸ்கின் அகமது, முஸ்தாபிஜூர் ரகுமான் பயனுள்ள பங்களிப்பை அளித்தனர். நல்ல உத்வேகத்துடன் இருக்கும் வங்காளதேச அணி இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளிக்க எல்லா வகையிலும் முயற்சிக்கும். இருப்பினும் இந்த ஆட்டத்தில் வலுவான இங்கிலாந்து அணியின் கையே ஓங்க அதிக வாய்ப்புள்ளது.

சர்வதேச ஒருநாள் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 24 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 19-ல் இங்கிலாந்தும், 5-ல் வங்காளதேசமும் வெற்றி கண்டுள்ளன. உலகக் கோப்பை தொடரில் இரு அணிகளும் 4 முறை சந்தித்ததில் தலா 2 வெற்றியை பெற்றுள்ளன.

இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இங்கிலாந்து: பேர்ஸ்டோ, டேவிட் மலான், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டன், சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், மார்க்வுட், மொயீன் அல்லது ரீஸ் டாப்லே.

வங்காளதேசம்: தன்சித் ஹசன், லிட்டான் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ், நஜ்முல் ஹூசைன் ஷன்டோ, ஷகிப் அல்-ஹசன் (கேப்டன்), முஷ்பிகுர் ரஹிம், தவ்ஹித் ஹிரிடாய், மக்முதுல்லா அல்லது மஹிதி ஹசன், தஸ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம், முஸ்தாபிஜூர் ரகுமான்.

பாகிஸ்தான்-இலங்கை

ஐதராபாத்தில் பிற்பகல் 2 மணிக்கு அரங்கேறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மல்லுக்கட்டுகின்றன.

பாகிஸ்தான் அணி தனது தொடக்க ஆட்டத்தில் 81 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை தோற்கடித்தது. அந்த ஆட்டத்தில் மிடில் வரிசை பேட்ஸ்மேன்களான முகமது ரிஸ்வான், சாத் ஷகீல், முகமது நவாஸ், ஷதப்கான் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு அணி சவாலான ஸ்கோரை எட்ட வழிவகுத்தனர். தொடக்க ஆட்டக்காரர் பஹர் ஜமான் தொடர்ந்து சொதப்புவதால் அவருக்கு அணியில் இடம் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி, தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் 102 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதில் 429 ரன் என்ற இமாலய இலக்கை விரட்டுகையில், இலங்கை அணியில் குசல் மென்டிஸ், அசலங்கா, தசுன் ஷனகா அரைசதம் அடித்தாலும் அது அணியை கரைசேர்க்க போதுமானதாக இல்லை. இலங்கை பந்து வீச்சை தென்ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் துவம்சம் செய்து விட்டனர். தசைப்பிடிப்பு காரணமாக முதல் ஆட்டத்தில் இருந்து ஒதுங்கிய சுழற்பந்து வீச்சாளர் தீக்ஷனா குணமடைந்து விட்டார். அவர் அணிக்கு திரும்புவது இலங்கைக்கு கூடுதல் பலமாகும்.

மோசமான தோல்வியில் இருந்து எழுச்சி பெற்று இந்த உலகக் கோப்பையில் முதல் வெற்றியை பதிவு செய்யும் உத்வேகத்துடன் இலங்கை வரிந்து கட்டும். இலங்கை வீரர்கள் பலர் ஐ.பி.எல். போட்டியில் ஆடுவதால் அந்த அனுபவம் அந்த அணிக்கு நிச்சயம் கைகொடுக்கும்.

சுழற்பந்து வீச்சில் திறமையான வீரர்களை உள்ளடக்கிய இலங்கை அணியை வீழ்த்த வேண்டுமானால் பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் முழு பலத்தை காட்ட வேண்டும். உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் அணி இலங்கையிடம் ஒரு போதும் தோற்றதில்லை. அந்த அணிக்கு எதிராக இதுவரை ஆடியுள்ள 7 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ள பாகிஸ்தான் அந்த பெருமையை தக்கவைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஒரு நாள் போட்டியில் இவ்விரு அணிகள் இதுவரை 156 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 92-ல் பாகிஸ்தானும், 59-ல் இலங்கையும் வெற்றி கண்டுள்ளன. ஒரு ஆட்டம் 'டை' ஆனது. 4 ஆட்டங்களில் முடிவு இல்லை.

இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

பாகிஸ்தான்: பஹர் ஜமான் அல்லது அப்துல்லா ஷபிக், இமாம் உல்-ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், சாத் ஷகீல், இப்திகர் அகமது, முகமது நவாஸ், ஷதப் கான், ஹசன் அலி, ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப்.

இலங்கை: பதும் நிசாங்கா, குசல் பெரேரா, குசல் மென்டிஸ், சமரவிக்ரமா, சாரித் அசலங்கா, தனஞ்ஜெயா டி சில்வா, தசுன் ஷனகா (கேப்டன்), துனித் வெல்லாலகே, கசுன் ரஜிதா, பதிரானா, தில்ஷன் மதுஷன்கா அல்லது தீக்ஷனா.

இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்