டூ பிளஸ்சி, மேக்ஸ்வெல் அதிரடி வீண் : 8 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி திரில் வெற்றி
பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி திரில் வெற்றிபெற்றது.;
பெங்களூரு,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 24-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் பாப் டூ பிளிஸ்சிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. சென்னை அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 3 ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து களமிறங்கிய ரகானே 20 பந்துகளில் 37 ரன்கள் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான கான்வே அதிரடியாக ஆடி சிக்சர் மழை பொழிந்தார். அவர் 45 பந்துகளில் 83 ரன்கள் (6 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்து அவுட்டானார்.
அடுத்து களமிறங்கிய அதிரடியாக ஆடிய ஷிவம் துபே 27 பந்துகளில் 52 ரன்கள் (2 பவுண்டரி, 5 சிக்சர்) குவித்தார். அடுத்து களமிறங்கிய ராயுடு 14 ரன்களும், ஜடேஜா 10 ரன்களும் எடுத்து வெளியேறினர். முடிவில் மொயின் அலி 19 (9) ரன்களும், தோனி 1 ரன்னும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணியின் சார்பில் விராட் கோலி மற்றும் டூ பிளஸ்சிஸ் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் விராட் கோலி 6 ரன்களில் போல்ட் ஆகி பெங்களூரு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அடுத்து களமிறங்கிய லாம்ரோர் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
அடுத்ததாக டூ பிளஸ்சியுடன், மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். வாணவேடிக்கை நிகழ்த்திய இந்த ஜோடி அணியின் ரன் ரேட்டை வேகமாக உயர்த்தினர். இந்த ஜோடியில் சென்னை அணியின் பந்து வீச்சை சிதறடித்த டூ பிளஸ்சி 23 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் அதிரடியாக ரன் குவித்து வந்த மேக்ஸ்வெல் 24 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய மேக்ஸ்வெல் 76 (36) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேற, அவரைத்தொடர்ந்து டூ பிளஸ்சிஸ் 62 (33) ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக ஷபாஸ் அகமது மற்றும் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தனர். அதிரடியாக ரன்கள் குவித்த இந்த ஜோடியில் தினேஷ் கார்த்திக் 28 (14) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து ஷபாஸ் அகமது 12 (10) ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து களமிறங்கிய பர்னெல் 2 ரன்னிலும், பிரபு தேசாய் 19 (11) ரன்களிலும் வெளியேறினார்.
இறுதியில் ஹசரங்கா 2 ரன்னுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் பெங்களூரு அணி 20 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் எடுத்தது. சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகளும், பதிரணா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதன்மூலம் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி திரில் வெற்றிபெற்றது.