ரச்சின் ரவீந்திராவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் செய்த உதவி... ரசிகர்கள் நெகிழ்ச்சி
ரச்சின் ரவீந்திரா தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி மையத்தில் பயிற்சி செய்து வருகிறார்.
சென்னை,
இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அறிமுக வீரராக இடம் பெற்று இருந்தார் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா. அதன்படி சென்னை அணிக்காக வாங்கப்பட்ட அவர் இந்த தொடரில் 10 போட்டிகளில் விளையாடி ஒரு அரைசதத்துடன் 222 ரன்கள் குவித்துள்ளார்.
அந்த வகையில் தற்போது ரச்சின் ரவீந்திராவுக்கு தனிப்பட்ட முறையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் செய்துள்ள உதவிதான் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனெனில் ரச்சின் ரவீந்திரா ஐபிஎல் தொடருக்காக பயிற்சி செய்யாமல் தற்போது நியூசிலாந்து அணிக்காக விளையாட இருக்கும் போட்டிகளுக்காக சென்னை சிஎஸ்கே கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
நியூசிலாந்து அணி அடுத்து ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் இந்திய அணிக்கு எதிராக வரிசையாக டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது. இதன் காரணமாக நியூசிலாந்தில் பயிற்சி எடுப்பதை விட இந்திய ஆடுகளங்களில் பயிற்சி எடுத்தால் அது அடுத்தடுத்த தொடர்களுக்கு உதவும் என்று நினைத்த ரச்சின் ரவீந்திரா இதற்காக சிஎஸ்கே நிர்வாகத்திடம் அனுமதி கேட்டுள்ளார். அவருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முழு அளவில் உதவி செய்துள்ளது.
அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ரச்சின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெறுவாரா? என தெரியாத நிலையிலும் அவருக்கு உதவிக்கரம் நீட்டி இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தின் செயல் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.