கம்மின்ஸ், ஸ்டார்க் இருவரும் மகத்தான வீரர்கள்தான் ஆனால் அதற்காக இவ்வளவு பெரிய தொகையா..? - தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர்

10 அணிகள் பங்கேற்கும் 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் இறுதியில் தொடங்கி மே மாதம் வரை நடைபெற உள்ளது.;

Update: 2023-12-22 02:48 GMT

கேப்டவுன் ,

10 அணிகள் பங்கேற்கும் 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் இறுதியில் தொடங்கி மே மாதம் வரை நடைபெற உள்ளது. இதையொட்டி 10 அணிகளிலும் கழற்றி விடப்பட்ட மற்றும் விலகிய வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை எடுப்பதற்கான ஏலம் துபாயில் கடந்த 19ம் தேதி நடந்தது. வெளிநாட்டில் அரங்கேறிய முதல் ஐ.பி.எல். ஏலம் இதுதான். 10 அணிகளுக்கும் சேர்த்து அதிகபட்சமாக 30 வெளிநாட்டவர் உள்பட 77 இடங்களை நிரப்ப வேண்டி இருந்தது.

ஏலப்பட்டியலில் 119 வெளிநாட்டு வீரர்கள் உள்பட மொத்தம் 333 பேர் இடம் பிடித்திருந்தனர். ஏலத்தை மும்பையைச் சேர்ந்த மல்லிகா சாகர் நடத்தினார். அண்மையில் இந்தியாவில் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட்டில் கலக்கிய வீரர்களை வாங்குவதில்தான் அணிகள் ஆர்வம் காட்டின. அதேசமயம் விக்கெட் கீப்பர் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களை பெரிய அளவில் கண்டு கொள்ளவில்லை.

விறுவிறுப்பாக நடைபெற்ற ஏலத்தில் 30 வெளிநாட்டவர் உள்பட 72 வீரர்கள் ஏலம் போனார்கள். அதிகபட்சமாக ஆஸ்திரேலிய வீரர்களான மிட்செல் ஸ்டார்க் ரூ. 24.75 கோடிக்கு கொல்கத்தா அணியாலும், கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு ஐதராபாத் அணியாலும் ஏலத்தில் வாங்கப்பட்டனர்.

இந்நிலையில், கம்மின்ஸ், ஸ்டார்க் இருவரும் மகத்தான வீரர்கள் என்றாலும் அவர்களுக்கு மொத்தம் ரூ. 45.25 கோடிகளை கொடுத்தது அதிகம் என தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் டி வில்லியர்ஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

இந்த ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படக்கூடிய சில அணிகள் நன்றாக செயல்பட்டன. அந்த அணிகள் உணர்ச்சிபூர்வமாக அல்லாமல் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கினார்கள்.

பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் மகத்தான வீரர்கள்தான். ஆனால் அதற்காக இவ்வளவு பெரிய தொகையா?. இருப்பினும் இது அவர்களுடைய டிமேண்டை காட்டுகிறது. குறிப்பாக இந்த வருட ஏலத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நிறைய டிமேண்ட் இருந்தது. அதனாலேயே அவர்களுடைய மதிப்பும், விலையும் அதிகமாக சென்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்