இந்தியாவில் ஒரு கிராமத்தில் விழுந்த 'கிரிக்கெட் விதை'

இன்று உலக கிரிக்கெட்டின் மையமாக இந்தியாவே திகழ்கிறது. உலகிலேயே அதிக கிரிக்கெட் ரசிகர்களை கொண்ட நாடு இந்தியா.

Update: 2023-10-04 23:49 GMT


உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடர் இன்று தொடங்குகிறது. எந்த கிரிக்கெட் தேசத்தைவிடவும் இந்தியாவில் உலகக் கோப்பை யுத்தம் நடைபெறுவதுதான் மிகப் பொருத்தமானது. ஆம், கிரிக்கெட்டின் தாயகமாக இங்கிலாந்து இருந்தாலும், இன்று உலக கிரிக்கெட்டின் மையமாக இந்தியாவே திகழ்கிறது.

உலகிலேயே அதிக கிரிக்கெட் ரசிகர்களை கொண்ட நாடு இந்தியா. உலகிலேயே பணக்கார கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். உலகிலேயே மிகவும் பிரபலமான கிரிக்கெட் லீக் ஐ.பி.எல். அதிகமான சர்வதேச கிரிக்கெட் மைதானங்கள். உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான ஆமதாபாத் நரேந்திர மோடி மைதானம் என்று இந்தியாவின் கிரிக்கெட் கிரீடங்களை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

எல்லாவற்றையும் தாண்டி, இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறும்போதுதான், அது திருவிழா கோலாகலம் பெறுகிறது. காரணம் அது இந்தியர்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்துவிட்ட விளையாட்டு. இந்திய ரசிகர்கள் கிரிக்கெட்டை ரசிப்பவர்கள் அல்ல, கிரிக்கெட்டை சுவாசிப்பவர்கள்.

இந்தியர்களை பித்துப்பிடிக்க வைத்திருக்கிற கிரிக்கெட், இங்கு எப்போது முதன்முதலில் தடம்பதித்தது தெரியுமா? அதை கிரிக்கெட் பாணியிலேயே சொல்வது என்றால், 'முச்சத' (300) ஆண்டுகள் ஆகிவிட்டன.

குஜராத் மாநிலத்தின் தாதர் நதிக்கரையில்தான் 1721-ம் ஆண்டு முதல்முறையாக கிரிக்கெட் விளையாடப்பட்டது என்று வரலாற்று பதிவுகள் கூறுகின்றன.

தெற்கு குஜராத்தின் தன்காரி பாந்தர், இன்று தூங்கி வழியும் ஒரு சிறு கிராமம். ஆனால் 18-ம் நூற்றாண்டில் இப்பகுதி ஒரு பரபரப்பான துறைமுகமாக விளங்கியிருக்கிறது. அதற்கு அடையாளமாக இங்கு ஒரு பழைய கலங்கரைவிளக்கமும், சிதிலமடைந்த ஆங்கிலேய பாணி கட்டிடங்களும் காணப்படுகின்றன.

இந்த தன்காரி பாந்தர் கிராமத்தில்தான், கிழக்கிந்திய கம்பெனியின் கப்பல் மாலுமிகளில் ஒருவரான கிளெமன்ட் டவுனிங், தனது ஆட்களுடன் கிரிக்கெட் விளையாடிக் களித்தாராம்.

கிளெமன்ட் அதுகுறித்த தனது குறிப்பில், 'காம்பே (இன்றைய காம்பாத்) துறைமுகத்தில் இருந்து சரக்குகளை கொண்டு வந்த படகுகளுக்கு பாதுகாப்பு கொடுக்க கிழக்கிந்திய கம்பெனியின் 2 கப்பல்களில் நாங்கள் சென்றோம். அப்போதைய சூழ்நிலை காரணமாக, தன்காரி பாந்தரில் தங்க நேர்ந்தது. அந்த நாட்களில் நாங்கள் தினமும் கிரிக்கெட் விளையாடியும், உடற்பயிற்சிகள் செய்தும் எங்கள் கவனத்தை திசைமாற்றினோம். நாங்கள் கிரிக்கெட் ஆடியதை உள்ளூர் மக்கள் ஆர்வத்துடன் திரண்டு வந்து கண்டு ரசித்தனர்' என்று எழுதியிருக்கிறார்.

குஜராத்தின் தன்காரி பாந்தரில் கிழக்கிந்திய கம்பெனியினர் கிரிக்கெட் விளையாடியதை விளக்கும் படம்.

இந்திய மண்ணில் முதன்முதலாக பந்து வீசப்பட்டு, மட்டையால் விளாசப்பட்டது குறித்த குறிப்பு இதுதான். அப்போது கிரிக்கெட்டுக்கு முறைப்படி விதிகள்கூட வரையறுக்கப்படவில்லை. 1744-ம் ஆண்டில்தான் கிரிக்கெட்டு விளையாட்டுக்கான விதிகள் உருவாக்கப்பட்டன.

ஆக, இந்தியாவில் இப்போது கோடிக்கணக்கானவர்களை கட்டிப்போட்டிருக்கிற கிரிக்கெட், இன்று சுமார் 6 ஆயிரம் பேரே வசிக்கும் கிராமத்தில்தான் விதையூன்றி இருக்கிறது.

1792-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கொல்கத்தா கிரிக்கெட் மற்றும் கால்பந்து கிளப்தான் இந்தியாவின் முதல் கிரிக்கெட் கிளப். இந்தியாவாழ் கிழக்கிந்திய கம்பெனி ஆங்கிலேயர்கள் இதை ஆரம்பித்தார்கள்.

ஆனால் இந்தியாவில் இந்தியர்களால் தொடங்கப்பட்ட முதல் கிரிக்கெட் கிளப் என்று பார்த்தால், 1848-ம் ஆண்டு மும்பையில் தோற்றுவிக்கப்பட்ட ஒரியண்டல் கிரிக்கெட் கிளப்பையே சொல்ல வேண்டும். பார்சிகள் இதை தொடங்கினார்கள்.

1912-ம் ஆண்டுவாக்கில், பம்பாயில் (மும்பை) இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், பார்சிகள் என்று ஒவ்வொரு சமூகத்தினரும் தனித்தனி கிரிக்கெட் அணிகளை உருவாக்கி, ஐரோப்பியர்களுடன் மோதத் தொடங்கினார்கள். ஆரம்பகாலத்தில் இந்தியாவில் கிரிக்கெட்டில் புகழ்பெற்ற வீரர்களாக விளங்கியவர்கள், ரஞ்சித் சிங்ஜியும், துலீப் சிங்ஜியும். (இவர்களின் பெயர்களில்தான் இன்று இந்தியாவின் இரு பெரும் முதல் தர கிரிக்கெட் தொடர்களான ரஞ்சிக் கோப்பை, துலீப் கோப்பை தொடர்கள் நடைபெறுகின்றன.)

'இந்திய கிரிக்கெட்டின் தந்தை' ரஞ்சித்ஜிங்ஜி

அதிலும் நவாநகர் (இன்றைய குஜராத்தின் ஜாம்நகர்) ராஜாவான ரஞ்சித் சிங்ஜி, 'இந்திய கிரிக்கெட்டின் தந்தை' என்று போற்றப்படுகிறார். 1928 டிசம்பரில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தொடங்கப்பட்டிருந்தாலும், இந்திய தேசிய அணி என்று முறையாக உருவாக காலம்பிடித்தது. எனவே ரஞ்சித் சிங்ஜியும், அவரது மருமகனான துலீப் சிங்ஜியும், இங்கிலாந்தில் அந்நாட்டு அணிக்காக ஆடினார்கள். மிகவும் திறமையான கிரிக்கெட் வீரர்கள் என்று வெள்ளையர்களாலே வியந்து பாராட்டப்பட்டனர்.

துலீப்சிங்ஜி

சி.கே.நாயுடு தலைமையிலான இந்திய அணி, 1932-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக, பிரசித்தி பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் முதல் அதிகாரப்பூர்வ டெஸ்ட் போட்டியில் விளையாடியது. ஆனால் 20 ஆண்டுகள் கழித்துத்தான் முதல் டெஸ்ட் வெற்றியை ருசித்தது.

ஆனால் 1974-ம் ஆண்டு அஜித் வடேகர் தலைமையில் முதல் ஒருநாள் போட்டியில் ஆடிய இந்திய அணி, அதற்கடுத்த 1975-ம் ஆண்டிலேயே உலகக் கோப்பை போட்டியில் கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் முதல் வெற்றியை சந்தித்துவிட்டது. அப்போது இந்திய அணியின் தலைவர், நம்மூர் எஸ்.வெங்கடராகவன்.

ஆனால் இந்தியா ஆரம்பத்தில் ஒருநாள் போட்டிகளில் 'சாதா'வாகத்தான் இருந்தது. அது 'தாதா' போல ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது 1990-களின் பிற்பகுதியில்தான்.

தொடக்கத்தில் சுதேச அரச குடும்பத்தினர், அதன் பின்னர் மேல்தட்டு மக்களின் ஆட்டமாக இருந்த கிரிக்கெட்டை, வெகுஜன மக்களின் விளையாட்டாக மாற்றியது, 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையை கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி வென்றதுதான். நாட்டில் தொலைக்காட்சியின் பரவலுக்கும், நேரலை ஒளிபரப்புக்கும் பிரதான இடம் இருப்பதை மறுப்பதற்கில்லை.

இந்தியாவில் கிரிக்கெட்டும், இந்திய கிரிக்கெட் அணியும் வெகு தூரத்தை கடந்துவந்துவிட்டன. 'ரன் மெஷின்' கவாஸ்கர் முதல், 'சத நாயகன்' சச்சின் வரை பல ஜாம்பவான்கள் உருவாகியிருக்கிறார்கள்.

அந்நாளில் பெருநகரங்களில் மட்டுமே இருந்துவந்த கிரிக்கெட் வசதிகள் இன்று சிற்றூர்களுக்கும் வந்துவிட்டன. உள்ளூர் தொடர்களிலும் உலகத் தரத்துக்கு அசத்துகிறார்கள். மைதானங்கள் எல்லாம் சர்வதேச தரத்தில் ஜொலிக்கின்றன. ஐ.பி.எல். கிரிக்கெட் ஒப்பந்தத்துக்கு அனைத்து நாட்டு வீரர்களும் ஏங்குகிறார்கள்.

அந்தக் காலத்தில் கொல்கத்தா கிரிக்கெட் கிளப்பில் ஓர் ஆட்டம்.

பரிசுத்தொகையும், ஸ்பான்சர் ஆதரவும் குவிய, பலர் தேசிய அணிக்கு முன்னேறாமலேயே கோடீஸ்வரர்கள் ஆகிறார்கள்.

இந்திய கிரிக்கெட் அணியும் ஏராளமாய் சாதித்திருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியாவுக்கு பிறகு 2 முறை (1983, 2011) ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற அணி, முதல் டி-20 உலகக் கோப்பையை கைப்பற்றிய அணி, இருமுறை சாம்பியன்ஸ் டிராபியையும், அதிகபட்சமாக 8 முறை ஆசிய கோப்பையையும் வென்ற அணி என்று அசத்தியிருக்கிறது.

ஆனால் சமீபகாலமாக, சாம்பியன் வீரர்கள் இருந்தாலும் முக்கிய கட்டங்களில் சறுக்கும் அணி (உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதலிரு இறுதிப்போட்டிக்கும் முன்னேறி, மண்டியிட்டதை மறக்கமுடியுமா?) என்ற கெட்டபெயரை வாங்கியிருக்கிறது.

ஆனால் இந்த முறை அந்த பெயரை மாற்றும், மீண்டும் ஒருமுறை சொந்த மண்ணில் உலகக் கோப்பையை கையில் ஏந்தும் என்று நம்புவோம்!

மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்பின் மகத்துவம்:-

இந்திய கிரிக்கெட் வரைபடத்தில் சென்னைக்கும், மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்புக்கும் (எம்.சி.சி.) தவிர்க்கமுடியாத இடம் உண்டு.

1846-ல் அலெக்சாண்டர் ஆர்புத்நாட்டால் நிறுவப்பட்ட மெட்ராஸ் கிரிக்கெட் கிளப், 175 ஆண்டுகளை கடந்து வெற்றிநடை போடுகிறது. இந்தியாவில் கொல்கத்தா கிரிக்கெட் கிளப்புக்கு அடுத்து 2-வதாக தொடங்கப்பட்ட கிரிக்கெட் கிளப் இதுதான். அதேபோல கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்துக்குப் பிறகு நாட்டிலேயே 2-வது பழமையான கிரிக்கெட் மைதானம் என்ற பெருமையும் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்துக்கு உண்டு. இது படிப்படியாக மாற்றம் கண்டு, இன்று உலகத்தர வசதிகளுடன் உயர்ந்து நிற்கிறது. நாட்டின் பிரதான டெஸ்ட் மைதானங்களில் ஒன்று சேப்பாக்கம். இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 2-வது வாரம் நடைபெற்றுவந்த 'பொங்கல் டெஸ்ட்'டுக்கு தனி மதிப்பு உண்டு. 1952-ம் ஆண்டு இந்தியா இங்கிலாந்துக்கு எதிராக முதல் டெஸ்ட் வெற்றியைப் பெற்றதும் சென்னை மண்ணில்தான்.


இந்திய கிரிக்கெட்டில் முக்கிய ஆண்டுகள்:-

 1987 உலகக் கோப்பை தொடக்கவிழாவில்...


1721- முதல்முறையாக இந்தியாவில் கிரிக்கெட் ஆட்டம்.

1792- இந்தியாவில் முதல் கிரிக்கெட் கிளப்பான கொல்கத்தா கிரிக்கெட் மற்றும் கால்பந்து கிளப் தொடக்கம்.

1846- மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி.) தொடக்கம்.

1848- இந்தியர்களின் முதல் கிரிக்கெட் கிளப் (மும்பை ஒரியண்ட் கிரிக்கெட் கிளப்).

1922- டெல்லியில் முதல் அகில இந்திய கிரிக்கெட் தொடர்.

1928- இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) தொடக்கம்.

1932-இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவின் முதல் டெஸ்ட் போட்டி.

1934-ரஞ்சிக் கோப்பை தொடர் தொடக்கம்.

1952- இங்கிலாந்துக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டி, பாகிஸ்தானுக்கு எதிராக முதல் டெஸ்ட் தொடர் வெற்றி.

1974- இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டி பிரவேசம்.

1975-கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டி வெற்றி.

1983-முதல்முறையாக உலகக் கோப்பை வெற்றி.

1987- முதல்முறையாக இந்தியாவில் உலகக்கோப்பை தொடர்.

1996-இரண்டாவது முறையாக இந்தியாவில் உலகக் கோப்பை தொடர்.

2002-சாம்பியன்ஸ் கோப்பை வெற்றி.

2007- முதல் 20 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன்.

2011-இந்தியாவில் நடந்த உலகக்கோப்பை தொடரில் 2-வது முறையாக வெற்றி வாகை.

2017-சாம்பியன்ஸ் கோப்பை வெற்றி.

2023- இந்தியாவில் 4-வது முறையாக உலகக்கோப்பை தொடர்.

Tags:    

மேலும் செய்திகள்